ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த பல உண்மைகளை வெளியிடவேண்டிய நிலையேற்படலாம் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாகல ரட்நாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி தொடர்ந்தும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வெளியிட்டுவந்தால் பல உண்மைகளை வெளியிடவேண்டிவரும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டுவிட்டரில் இதனை பதிவு செய்துள்ள சாகல ரட்நாயக்க முக்கிய சம்பவங்கள் குறித்த விசாரணைகளில் ஜனாதிபதி தலையிட்டமை குறித்து பொறுப்பு வாய்ந்த அமைச்சர் என்ற அடிப்படையில் நான் இதுவரை பகிரங்கமாக எதனையும் தெரிவிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இந்த கண்மூடித்தனமான குற்றச்சாட்டுகள் தொடர்ந்தால் யார் எப்போது எவ்வகையில் தலையீடு செய்தார்கள் என்பதை அம்பலப்படுத்தவேண்டியிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிஐடி அதிகாரி நிசாந்த சில்வாவின் இடமாற்றம் குறித்து பொலிஸ்மா அதிபர் பாதுகாப்பு செயலாளரிற்கு எழுதியுள்ள கடிதம் ஜனாதிபதியே உத்தரவை பிறப்பித்தார் என்பதை தெளிவாக தெரிவித்துள்ளது எனகுறிப்பிட்டுள்ள சாகல ரட்நாயக்க ஜனாதிபதி தலையீடுகளிற்கு தெளிவான உதாரணம் இது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தெரிவிப்பது போல கடந்த மூன்றரைவருட காலப்பகுதியில் ஊழல்கள் இடம்பெற்றிருக்குமானால் தேசிய அரசாங்கத்தின் தலைவர் என்ற அடிப்படையில் ஜனாதிபதியும் அதற்கு பொறுப்பேற்கவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.ஊழல்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கான ஆணைகுழுக்களை அமைப்பதை நாங்கள் வரவேற்கின்றோம் எனவும் சாகலரட்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.