வல்லமை தாருமெம் இறையனார்களே- மா.பாஸ்கரன், யேர்மனி

4632 0

வல்லமை தாருமெம் இறையனார்களே.

மனிதனின் வாழ்வுக்காகவும் இருப்புக்காகவும் பல்வேறு செயற்பாடுகள் பௌதீக உயிரியல் இயற்பியல் ஆய்வியல் வழியிலே தொடர்கின்ற அதேவேளை மனிதனை மனிதன் அழிக்கும் துன்பியலும் தொடர்ந்த வண்ணமே உள்ளது. இதன் இன்னொரு வடிவமாகப் பூமிப்பந்திலே சிறுபான்மைகளைப் பெரும்பான்மைகள் சனநாயகம் என்ற உருமறைப்பில் இருந்தவாறு விழுங்கி வருகின்றமையையும் நிகழ்ந்தேறி வருகின்ற துயரும் நிகழ்கின்றது. இது ஒன்றும் தற்செயலான நிகழ்வென்று கூறிவிட முடியுமா? நாடுகான் பயணங்கள் வழி நிலங்கள் பறிபோனதோடு இனங்களும் அழிவடைவது தொடர்கதையாகியே வருகின்றது. இந்த சூழலில் இருந்து போராடுவோர் தம்மைத் தற்காத்துக் கொண்டுள்ளமையும் ஒருபுறம் நிகழாமலில்லை. இற்றைக்குச் சில நூற்றாண்டுகள் முற்பட்ட காலத்திற் பல மேற்கு நாடுகள் தத்தமது மரபுவழி உரித்தான தாயக நிலங்களுக்காகவும் மக்களுக்காகவும் போராடிய அரசர்களைக் கொள்ளைக்காரராக்கிக் கொலைசெய்து மக்களைக் கேட்போரற்ற அனாதைகளாக்கித் தாமே காக்கவந்தோராகக் காட்டி அடிமைகளாக மாற்றியதோடு அந்த நாடுகளின் செல்வங்களையும் கொள்ளையிட்டுத் தமது நாடுகளை வளப்படுத்திக்கொண்டன.

ஈழத்தீவிலும் விஜயயனும் அவனது தோழர்களதும் வருகையோடு புதியதொரு இனமாகத் தோற்றம் பெற்ற சிங்களமானது பிரித்தானியா கொடுத்துச் சென்ற விடுதலையின் பின் எமதினத்தை அழிக்க முற்பட்டபோது அதனைத் தடுத்துத் தற்காக்க முற்பட்டோரைப் பயங்கரவாதிகளாக முத்திரைகுத்தியதோடு தமிழர் தாயகத்தைக் கபளீகரம் செய்து வருகின்றது. ஈழ வரலாற்றிலும் தமிழின வரலாற்றிலும் பொன்னெழுத்தகளாற் பொறிக்கப்படவேண்டிய காலகட்டமாகத் திகழ்வது தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் எழுச்சிக் காலமேயாகும். அழிக்க வந்தோரை தடுத்து நிறுத்தித் தன்மானப் போர்தொடுத்துத் தமிழ் மானம் காத்த மறவர் படையணிகளை முப்படையோடு உருவாக்கிய வல்லமையே எம் தலைவன். நீதி நேர்மை கண்ணியம் காத்த அறப்போராளி. அதனாற்றான் அவரைத் தமிழுலகு தனது பிள்ளையாகத் தத்தெடுத்துக் கொண்டது. அவரை இறைவனாக உருவகித்துக் கொண்டது.

துன்பம் வரும்போது கடவுளே என்று கூப்பிடுகின்றோம். ஆனால் எம்மைத் துன்பம் சூழ்ந்து அழிக்க முற்பட்டபோது காவலரணமைத்துக் காவல்காத்தவர்களே எமது மாவீரர்கள். குறைந்த வளங்களோடு குன்றாத மனவலிமையும் வற்றாத வீரமும் கொண்டு தமிழினத்தைக் காத்து நின்றவர்களை நாம் காவற் தெய்வங்கள் என்றே கூறலாம். தமதின்னுயிரைத் துச்சமாக மதித்து தமது இனத்தின் வாழ்வு தலைநிமிரவும் செழித்தோங்கிடவும் உயிரீகம் புரிந்த உத்தமர்கள் என்றால் எம் மாவீரர்களே.

கார்த்திகை பிறந்துவிட்டாற் கார்பொழியும். இயற்கை எழில் சொரியும். தமிழரில்லமெல்லாம் மாவீரர் முகம்தெரியும். வல்லமை தாருமெம் இறையனார்களே என எம் வாய்கள் எமையறியாமலே உதிர்க்கும். காலம்தந்த கொடையாய் நிமிர்ந்த எம் தலைவனின் சேனையிணைந்து தென்னிலங்கை அசுரர்களின் செருக்கையடக்கிய செந்தமிழ் மறவரைச் செங்காந்தள் மலரெடுத்து வணங்கும் வாரமிது. நன்றி மறவா நற்பண்புக்குரித்தான தமிழினம் இனவாழ்வு நிலைபெற தம் வாழ்வை அர்பணித்தோரை,

அனைத்தையும் மறந்து தமிழராய் ஒன்று திரண்டெழுந்து தமிழினத்தின் இறையனார்களுக்கு விளக்கேற்றி உறுதிபூணும் நாளான கார்த்திகை 27ஐ நாமெதிர்கொண்டு நிற்கும் வேளையில், தேசமும் தேசியமும் நிலைபெற வாழ்ந்தோரை எடுகோளாய் ஏற்றுத் தமிழினம் ஏற்றம் பெறச்சிந்திப்போராகத் தமிழர்கள் எழுச்சி பெறுவதோடு, தமிழினத்தின் இறையனார்களிடம் வல்லமை பெற்றுத் தமிழ்த்தேசியம் திடம்பெற உழைப்பதே நாம் செய்யும் வரலாற்றுப் பணியாகும். திரள்நிலையடையாத எந்தவொரு இனக்குழுவும் நின்றுநிலைத்தல் இவ்வுலகிற் சாத்தியமாகா. எனவே.தமிழினத்தின் இறையனார்களுக்கு விளக்கேற்ற ஒன்றுதிரள்வோம். தமிழினம் நிலைபெற அவர் பணி தொடர்வோம்.

மா.பாஸ்கரன்
யேர்மனி

Leave a comment