கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய குழு தலைவர் டேனியல் ரிச்சர்டு கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆய்வு முடிந்ததும் மத்திய குழுவின் தலைவர் டேனியல் ரிச்சர்டு நிருபர்களிடம் கூறியதாவது:-
கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டம் உண்மையிலேயே கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சேத விவரங்களையும், நடந்து வரும் மீட்பு ப ணிகள் பற்றிய விவரங்களையும் மாவட்ட நிர்வாகம் முழுமையாக எடுத்து கூறி உள்ளது. நாங்களும் புயலால் சேதம் அடைந்துள்ள பகுதிகளை பார்வையிட்டு உள்ளோம்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சேத மதிப்பு எவ்வளவு என்ற விவரத்தை இப்போது உடனடியாக கூற முடியாது. இன்னும் சில இடங்களை நாங்கள் ஆய்வு செய்ய வேண்டியது உள்ளது. எல்லா இடத்திலும் ஆய்வு பணிகள் முழுமையாக முடிவடைந்த பின்னர் தான் மொத்த சேத மதிப்பு எவ்வளவு என்ற விவரத்தை மத்திய அரசிடம் அறிக்கையாக தாக்கல் செய்வோம் என்றார்.
புதுக்கோட்டை வடகாடு வடக்கிப்பட்டியில் ஆய்வு செய்ய சென்ற மத்தியக்குழு தலைவர் டேனியல் ரிச்சர்டு அங்குள்ள தோட்டத்தில் தென்னை மரங்கள் சாய்ந்து கிடந்ததை பார்த்து அதனை பார்வையிட தோட்டத்திற்குள் நடந்து சென்றார்.
அப்போது போதிய வெளிச்சம் இல்லை. இதனால் சற்றுமேடான பகுதியில் ஏற முயன்றபோது திடீரென அவர் கால் இடறி கீழே விழப்பார்த்தார். உடன் சென்ற அதிகாரிகள் அவரை கைத்தாங்கலாக பிடித்துக் கொண்டனர்.