அரச பாடசாலை மாணவர்களுக்கு அடுத்த வருடத்துக்கான இலவச சீருடை வழங்குவது தொடர்பிலான அமைச்சரவைப் பிரேரணையை இதுவரையில் கல்வி அமைச்சுக்கு கிடைக்கவில்லையெனவும், இதனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாதுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சீருடை விநியோகிப்பதற்கான விலைமனுக் கோரல் நடைபெற்றதன் பின்னர் பாடசாலை மாணவர்களின் கைக்கு சீருடைத் துணி போய்ச் சேர்வதற்கு 3 மாத கால அவகாசம் தேவைப்படும். தற்பொழுதுள்ள அரசியல் சூழ்நிலையில் பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடைத் துணி போய்ச் சேர்வதற்கு அடுத்த வருடம் மார்ச் மாதத்தையும் தாண்டி விடும் எனவும் அமைச்சின் உயர் அதிகாரியொருவர் கூறியுள்ளார்.
அமைச்சரவை அனுமதி கிடைக்கப் பெற்றதன் பின்னர் மதிப்பீட்டுக் குழுவொன்று அமைக்கப்பட வேண்டும். அதன் பின்னரே விலைமனுக் கோரல் இடம்பெறும். விலை மனுக் கோரல் இடம்பெற்று விலை தீர்மானிக்க 21 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.
இந்த நாட்டு உற்பத்தி துணியைப் பெற்றுக் கொள்வதாயின் அதற்கான உற்பத்திக்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். அல்லது இறக்குமதி செய்யப்படுவதாயின் அதற்கும் அவகாசம் கொடுக்கப்படல் வேண்டும்.
கடந்த அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு அமைய 45 லட்சம் வவுச்சர் பத்திரங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இந்நிலையிலேயே இந்த அரசாங்கம் வவுச்சருக்குப் பதிலாக சீருடைத் துணி வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வதிகாரி மேலும் கூறியுள்ளார்.