பைசா நகர் சாய்ந்த கோபுரம் மேலும் 4 செ.மீ. நிமிர்த்தப்பட்டது- இனி ஆபத்து இல்லை

491 0

பைசா நகரத்தில் உள்ள சாய்ந்த கோபுரம் மேலும் 4 சென்டி மீட்டர் அளவுக்கு நிமிர்த்தப்பட்டதையடுத்து,  அதற்கு இனி ஆபத்து இல்லை என என்ஜினீயர்கள் தெரிவித்துள்ளனர்.இத்தாலி நாட்டில் உள்ள பைசா நகரத்தில் உள்ள சாய்ந்த கோபுரம் உலக அதிசயங்களில் ஒன்றாக திகழ்கிறது.

இந்த கோபுரம் கட்டுமான பணி கி.பி. 1173-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 1372-ம் ஆண்டு முடிக்கப்பட்டது. 186 அடி உயரத்தில் 7 மாடிகளுடன் இதை கட்டி இருந்தனர்.

கட்டுமான பணிகள் முடிந்ததில் இருந்தே கோபுரம் சிறிது சிறிதாக சாயத் தொடங்கியது. ஆனாலும் அது கீழே விழவில்லை. இதனால் பெரும் அதிசயமாக கருதப்பட்டது.

அது விழுந்து விடாமல் தடுக்க பல்வேறு முயற்சிகளும் தொடர்ந்து எடுக்கப்பட்டு வந்தன.

1990-ம் ஆண்டு வாக்கில் இது சாய்வது மேலும் அதிகரித்தது. இதனால் எந்த நேரத்திலும் கோபுரம் விழுந்து விடும் என்று பயம் ஏற்பட்டது.

அந்த நேரத்தில் சுமார் 15 அடி தூரத்துக்கு கட்டிடம் சாய்ந்து இருந்தது. அதாவது 5.5 டிகிரி கோணத்தில் அதன் சாய்வு அமைந்து இருந்தது.

எனவே, 1990-ல் இருந்து 11 ஆண்டுகளாக அதன் அருகே யாரையும் செல்ல அனுமதிக்கவில்லை. ஆனாலும் கட்டிடத்தை பாதுகாக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன.

நிபுணர்கள் குழு மூலம் ஆய்வுகளை மேற்கொண்டு தடுக்கும் முயற்சிகளை செய்தனர். இதனால் கட்டிடம் மேலும் சாய்வது நிறுத்தப்பட்டது. அத்துடன் கொஞ்சம் கொஞ்சமாக அதை நிமிர்த்தும் பணிகளும் நடந்தன.

இதற்காக தனி பாதுகாப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. என்ஜினீயர் மைக்கேல் ஜமியோ கோவஸ்கி தலைமையிலான இந்த குழுவினர் தொடர்ந்து கோபுரத்தை நிமிர்த்தும் பணிகளை செய்து வந்தனர். அதன் மூலம் 14 செ.மீட்டர் அளவுக்கு கோபுரம் நிமிர்த்தப்பட்டு இருந்தது.

இப்போது மேலும் 4 சென்டி மீட்டர் அளவுக்கு கோபுரத்தை நிமிர்த்தி உள்ளனர். இதனால் கோபுரம் இன்னும் வலுவாகி இருக்கிறது.

எனவே, இனி கட்டிடத்துக்கு ஆபத்து எதுவும் ஏற்படாது என்று என்ஜினீயர் குழுவினர் கூறினார்கள்.

Leave a comment