ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை சம்பந்தமாக விசாரணை செய்ய நியமிக்கப்பட்டிருந்த குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி, ஜனாதிபதியின் விசேட உத்தரவின்படி இடமாற்றம் செய்யப்பட்டதையிட்டு தாம் கவலையடைந்துள்ளதாக “புரவசி பலய” அமைப்பு ஜனாதிபதியிடம் அறிவித்துள்ளது.
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை சம்பந்தமாக விசாரணையை விரைவுப்படுத்தி குற்றவாளிகளை சட்டத்திற்கு முன் கொண்டு வருமாறு கோரி ஜனாதிபதிக்கு அவ்வமைப்பு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அக்கடிதத்திலேயே இதனைக் கூறியுள்ளது.
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை சம்பவம் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பிரதான தலைப்பாக இருந்தது என்று சுட்டிக்காட்டியுள்ள அந்த அமைப்பு, கொலையாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி நீதியை நிலை நாட்டுவது இலங்கையின் முதற் பிரஜையின் பொறுப்பாகும் என்றும் அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த இக்கொலை விசாரணை தொடர்பில் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும், நிலையிலேயே குறித்த அதிகாரியின் இடமாற்றம் இடம்பெற்றுள்ளதாகவும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.