பாராளுமன்ற தெரிவுக்குழு நியமனத்தில் சர்ச்சை நிலைமை உருவாகியுள்ள நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு பாராளுமன்றம் கூடுகின்றது.
ஆளும் கட்சிக்கா அல்லது பெரும்பான்மைக் கட்சிக்கா அதிக அங்கத்துவம் வழங்கப்பட வேண்டும் என்ற சர்ச்சை இன்று சபை அமர்வுகளின் போது ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இன்று கூடும் பாராளுமன்ற கூட்டத்தின் போது பிரதான விடயமாக பாராளுமன்ற தெரிவுக்குழு நியமனம் இடம்பெறவுள்ளது. கடந்த 19 ஆம் திகதி பாராளுமன்றம் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடியபோது அன்றைய தினம் காலை கூடிய கட்சி தலைவர் கூட்ட தீர்மானம் படி பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கான கட்சி எம்.பி. க்களின் பெயர்களை பாராளுமன்ற செயலாளருக்கு பரிந்துரைக்குமாறு அறிவுறுத்தல் வழங்கினார்.
அதற்கமைய பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் தமது உறுப்பினர்களின் பெயர்களை பரிந்துரை செய்துள்ளது.
இதில் ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் அமைச்சர்களான தினேஷ் குணவர்தன, எஸ்.பி. திசாநாயக, மஹிந்த சமரசிங்க, நிமல் சிறிபால டி சில்வா, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
எதிர்க்கட்சி சார்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒருவரை ( மாவை சேனாதிராஜா), மக்கள் விடுதலை முன்னணி சார்பில் இருவர் (விஜித ஹேரத், நலிந்த ஜயதிஸ்ஸ )வின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று காலை 9 மணிக்கு பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் கட்சித் தலைவர்களின் கூட்டம் இடம்பெறவுள்ளது.
அதேவேளை இன்றும் பாராளுமன்றத்தின் பார்வையாளர்கள் கலரி மூடப்பட்டுள்ளதாக படைக்கல சேவிதர்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.