பொன்னாலைப் பாலத்தில் நேற்று மாலை  இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில்  மற்றொருவர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

காரைநகரில் உள்ள ஆலயம் ஒன்றில் பூசைகளை முடித்துவிட்டு  மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்த அர்ச்சர், கடற்றொழிலுக்குச் சென்றுவிட்டு துவிச்சக்கரவண்டியில் வந்துகொண்டிருந்தவரை முந்திச்செல்ல முற்பட்டார்.

இதன்போது துவிச்சக்கரவண்டியுடன் விபத்துக்குள்ளாகி யாழ்ப்பாணத்தில் இருந்து காரைநகர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த தனியார் பஸ்ஸுடன் குறித்த நபரின் மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.

இந்நிலையில் அர்ச்சகர் வீதியில் விழுந்து மோட்டார் சைக்கிளுடன் இழுத்துச் செல்லப்பட்டார். அவரது தலைக்கவசம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன சேதமடைந்திருந்தன. துவிச்சரவண்டியில் சென்றவர் கடலுக்குள் பாய்ந்த நிலையில் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அர்ச்சகர் ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றப்பட்டபோது சுயநினைவற்ற நிலையில் காணப்பட்டார் என அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். எனினும் அவர் உயிரிழந்துவிட்டார் என வைத்தியாசாலைத் தகவல்கள் தெரிவித்தன.

குறித்த விபத்தின் போது சாரதி பஸ்ஸை நிறுத்த முற்பட்டபோது பாலத்தில் எதிர்த்திசையில் தரித்து விடப்பட்டிருந்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடனும் பஸ் மோதியுள்ளது. இதனால் குறித்த மோட்டார் சைக்களும் சேதமடைந்துள்ளது.

குறித்த விபத்தில் வடலியடைப்பை சேர்ந்த அர்ச்சகரே உயிரிழந்துள்ளார் இவரின் சடலம் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.  துவிச்சக்கரவண்டியில் சென்ற நபரும் காயமடைந்த நிலையில்  போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இடம்பெற்ற இடம் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்டது எனினும், வட்டுக்கோட்டைப் பொலிஸார் உடனடியாக அங்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன் ஊர்காவற்றுறை பொலிஸார் வரும்வரை போக்குவரத்து ஒழுங்குகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.