பாராளுமன்றத்தில் பெரும்பான்மை மஹிந்த ராஜபக்ஷவுக்கே இருக்கின்றது. ரணில் விக்கிரமசிங்க பெரும்பான்மை இருப்பதாக தெரிவித்தாலும் இது வரை அவர்கள் காட்டவில்லை. அதனால் பாராளுமன்றத்தை கலைக்கும் நிலைப்பாட்டை நீக்கிக் கொள்ளுமாறு ஜனாதிபதிக்கு தெரிவிக்கின்றோம் என அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள சுதந்திர ஊடக நிலையத்தில் இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கை யிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
தற்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கின்றது. அதனை நாங்கள் தேவை ஏற்படும்போது காட்ட தயாராக இருக்கின்றோம். 120 உறுப்பினர்களுக்கும் அதிகமானவர்கள் எங்களுடன் இருந்தனர். என்றாலும் பாராளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்ததால் மீண்டும் அவர்கள் தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு இருந்த இடங்களுக்கே சென்றனர். ஆனால் தற்போது எங்களுக்கு பெரும்பான்மை இருக்கின்றது.
அதனால் பாராளுமன்றத்தை கலைக்கும் நிலைப்பாட்டை நீக்கிக்கொள்ளுமாறு ஜனாதிபதிக்கு தெரிவித்துக்கொள்கின்றோம்.
எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் தலைமையில் அரசாங்கம் அடுத்த இரண்டு வருடங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் முன் செல்லும். அத்துடன் 2020 ஆம் ஆண்டே பாராளுமன்ற தேர்தல் ஒன்றுக்கு செல்வோம் என்றார்.