தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் தின அனுஷ்டிப்பு வாரம் இன்று (புதன்கிழமை) ஆரம்பமாகியுள்ளது.
விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தனது இன்னுயிரை போராட்டக்களத்தில் தியாகம் செய்த முதலாவது மாவீரர் சங்கரின் நினைவாக, அவர் உயிரிழந்த கார்த்திகை 27ஆம் திகதி, விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் மாவீரர் தினமாக 1987ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது.
அன்றிலிருந்து தமிழர் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசங்களில் தமிழீழ விடுதலைக்காய் உயிர் தியாகம் செய்த விடுதலைப்புலிகளை நினைவுகூரும் அஞ்சலிகள் நடைபெற்றுவருகின்றன.
மாவீரர் நாளை அனுஷ்டிக்கும் வகையில் கார்த்திகை 21ஆம் திகதி மாவீரர் வாரம் ஆரம்பமாவது வழமை. அந்த வகையில் மாவீரர் வாரத்தில் பல்வேறுவிதமான நினைவுதின மற்றும் அகவணக்க நிகழ்வுகளில் ஈழத்தமிழர்கள் தம்மை ஈடுபடுத்திக் கொள்வர்.
அதேவேளை கார்த்திகை 27ஆம் திகதி இறுதி மாவீரர் தின நிகழ்வுகள் உணர்வுபூர்வமான முறையில் இடம்பெறுவதுடன், மாவீரர்களின் உறவினர்கள், பெற்றோர், இனவிடுதலை உணர்வாளர்கள் எனப் பலரும் தமது அகவணக்கங்களை மாவீரர்களுக்கு வழங்குவர்.