கஜா புயலால் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
வங்க கடலில் உருவான கஜா புயல் நாகை மற்றும் வேதாரண்யம் இடையே கரையை கடந்தது. இந்த புயலால் தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக பாதிப்படைந்தன. புயலால் இறந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.
இந்த நிலையில், புயல் பாதிப்பு பற்றி தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப்பணி மேற்கொள்ள தமிழக அரசு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
நிவாரண முகாம்களில் தங்கியுள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூடுதலாக ஒரு வேட்டி, சேலை வழங்கப்படும். முகாம்களில் தங்கியுள்ள பெரியோர், பெண்கள், குழந்தைகளுக்கு ஆவின் நிறுவனம் வழியே பால் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
கஜா புயலால் இறந்தோரூக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் முன்பே அறிவிக்கப்பட்டு உள்ளது. காயமடைந்தோருக்கு ரூ.1 லட்சம், சாதாரண காயத்துக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும்.
புயலால் உயிரிழந்த 1,181 ஆடுகளுக்கு தலா ரூ.3 ஆயிரம், 14,986 கோழி, பறவைகளுக்கு தலா ரூ.100 வழங்கப்படும்.
உயிரிழந்த 231 பசு, எருமை மாடுகளுக்கு தலா ரூ.30 ஆயிரம், 20 காளை மாடுகளுக்கு தலா ரூ.25 ஆயிரம், 19 கன்றுகளுக்கு தலா ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தொற்று நோய் பரவாமல் தடுக்க 372 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. மேலும் 1,014 நடமாடும் மருத்துவ முகாம்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.
‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று மீட்பு மற்றும் நிவாரண பணிகளை ஒருங்கிணைத்து துரிதப்படுத்த கூடுதலாக அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. புயல் சேதத்தை மதிப்பிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் புயல் சேதத்தை பார்வையிட சென்னையில் இருந்து விமானத்தில் இன்று காலை 5.30 மணிக்கு புறப்பட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி செல்லும் முதல்வர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகையில் புயல் சேத பகுதிகளை பார்வையிடுகிறார். பின்பு கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி புயல் சேதத்தை பார்வையிடுகிறார் முதல்வர் பழனிசாமி.