நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக பிரபல கார் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் கார்லோஸ் கோஷ், டோக்கியோ போலீசாரால் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜப்பானைச் சேர்ந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான நிசான் நிறுவனத்தின் தலைவராக இருந்து வருபவர் கார்லோஸ் கோஷ். நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் இவரை, விசாரணைக்கு பின்னர் டோக்கியோ போலீசார் நேற்று கைது செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
நிதி முறைகேடு மற்றும் வருமானத்தை குறைத்து காட்டிய புகார் தொடர்பாக கார்லோஸ் கோஷிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும், இதைத்தொடர்ந்து அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டதாகவும் ஜப்பானைச் சேர்ந்த என்.எச்.கே. வானொலியும் மற்றும் சில ஊடகங்களும் செய்தி வெளியிட்டன.
நிசான் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கார்லோஸ் கோஷ், மீது கூறப்பட்ட புகாரை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவரும், பிரதிநிதித்துவ இயக்குனர் கிரேக் கெல்லியும் நீண்ட காலமாக முறைகேடுகளில் ஈடுபட்டது அம்பலமானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.