சீனாவில் இருந்து வட கொரியாவினுள் சட்ட விரோதமாக நுழைந்த அமெரிக்கரை வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது என வடகொரிய அரசின் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
சீனாவில் இருந்து கடந்த மாதம் 16-ந் தேதி, வட கொரியாவினுள் சட்ட விரோதமாக நுழைந்த ஒரு அமெரிக்கர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது பெயர் லாரன்ஸ் புரூஸ் பைரன் என தெரிய வந்தது. அவர், “அமெரிக்காவின் மத்திய உளவுப்படை சி.ஐ.ஏ. உத்தரவின்பேரில்தான் நான் வடகொரியாவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்தேன்” என கூறினார்.
அவரை நாட்டில் இருந்து வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது என வடகொரிய அரசின் செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ. தெரிவித்தது.
பொதுவாக வடகொரியா இப்படி சட்டவிரோதமாக தங்கள் நாட்டினுள் நுழைகிற யாரையும் எளிதில் விடுவித்து விடாது. இருப்பினும் அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தை நடத்துகிற நிலையில் இருப்பதால்தான் லாரன்ஸ் புரூஸ் பைரனை விடுவிக்க முடிவு செய்துள்ளது என தகவல்கள் கூறுகின்றன.
இதே லாரன்ஸ் புரூஸ் பைரன் பெயரில் ஒருவர் கடந்த ஆண்டு தென்கொரியாவில் சட்டவிரோதமாக நுழைந்து கைது செய்யப்பட்டார். அவர் வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடத்துவதற்கான முயற்சியில் ஈடுபடுவதற்குத்தான் தான் தனிப்பட்ட பயணமாக வந்துள்ளதாக தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அவர் அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.