காரைக்கால் அருகே நள்ளிரவில் நடுக்கடலில் நின்ற கப்பலை கஜா புயல் கரைக்கு இழுத்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மராட்டிய மாநிலம் மும்பையில் இருந்து புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள தனியார் துறைமுகத்துக்கு ஒரு தனியார் கப்பல் தூர்வாரும் பணிக்காக வந்தது. அந்த கப்பலில் கேப்டன் உள்பட 7 ஊழியர்கள் இருந்தனர்.
துறைமுக பகுதியில் தூர்வாரும் பணிகளை முடித்துக்கொண்டு அந்த கப்பல், 15 நாட்களுக்கு முன்பாகவே காரைக்காலில் இருந்து புறப்பட்டு சென்றுவிட்டது. அடுத்த பணிக்காக அந்த கப்பலை காரைக்கால் அருகே நடுக்கடலில் நிறுத்தி இருந்தனர்.
இந்த புயல் காற்று நடுக்கடலில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த மும்பை கப்பலை, கரையை நோக்கி இழுத்து வந்தது. அதில் இருந்த ஊழியர்கள் கப்பலை நிறுத்துவதற்கு முயற்சி செய்தனர். ஆனால் புயலின் வேகம் காரணமாக, கப்பல் இழுத்து செல்லப்பட்டதால் ஊழியர்கள் பீதி அடைந்தனர்.
ஒரு வழியாக அந்த கப்பல் காரைக்கால் அருகே மேலவாஞ்சூர் கடற்கரையில் நின்றது. நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.