பயங்கரவாதம் ஏற்றுமதி விவகாரம்: பிரதமர் மோடி மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு

319 0

201609260530146349_pm-modi-speaks-to-people-of-pakistan-let-us-go-to-war_secvpfபாகிஸ்தான் நாடு பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்கிறது என திட்டமிட்டு அவதூறு பரப்புவதாக பிரதமர் மோடி மீது அந்த நாடு குற்றம் சாட்டியுள்ளது.

காஷ்மீர் மாநிலம் உரியில் அமைந்துள்ள ராணுவ முகாம் மீது கடந்த 18–ந்தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 18 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் நாட்டு மக்களிடம் பெரும் கொந்தளிப்பையும், அதிர்ச்சியையும் உருவாக்கியதுடன், மத்திய அரசுக்கும் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

பதன்கோட், உரி என இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஆதரவு அளித்து வரும் பாகிஸ்தானை பயங்கரவாத நாடு என அறிவிக்க வேண்டும் எனவும், இந்த நாட்டை சர்வதேச சமூகம் தனிமைப்படுத்த வேண்டும் எனவும் மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நேற்று முன்தினம் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தான் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

பாகிஸ்தான் அரசு பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்கிறது என்று கூறிய பிரதமர், உரி தாக்குதலை இந்தியா ஒருபோதும் மறக்காது என்று தெரிவித்தார். மேலும் அங்கு வீரமரணம் அடைந்த 18 வீரர்களின் தியாகம் வீண் போகாது என்பதை பாகிஸ்தான் தலைமைக்கு தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் கூறினார்.

பிரதமரின் இந்த குற்றச்சாட்டுக்கு பாகிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அந்த நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

கேரளாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பாகிஸ்தான் நாடு பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்கிறது எனக்கூறி பாகிஸ்தானை நிந்திப்பதற்கு முயன்றுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக இத்தகைய ஆதாரமற்ற, ஆத்திரமூட்டும் தகவல்களை வெளியிட்டு திட்டமிட்டு அவதூறு பரப்புவது துரதிர்ஷ்டவசமானது. உயர் அரசியல் மட்டத்தில் இருந்து இத்தகைய பொறுப்பற்ற செயல்கள் வெளிப்படுவது வருந்தத்தக்கது.

காஷ்மீர் இளம் தலைவர் பர்கான் வானி சட்டத்துக்கு புறம்பாக கொல்லப்பட்டதை தொடர்ந்து அங்கு அட்டூழியங்கள் நடந்து வருகிறது. கடந்த 75 நாட்களாக இந்திய படைகள் 100–க்கும் மேற்பட்ட காஷ்மீரிகளை கொன்று குவித்துள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் பார்வை இழந்தும், ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தும் உள்ளனர்.

இந்த அப்பட்டமான மனித உரிமை மீறல்களை உலக நாடுகள் கவனத்தில் கொண்டுள்ளதுடன், ஐ.நா., இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகள் கவலையும் வெளியிட்டு உள்ளன. காஷ்மீரில் அப்பாவி பொதுமக்கள், குழந்தைகள், பெண்கள் மீது தனது படைகள் நடத்தி வரும் இத்தகைய அட்டூழியங்களில் இருந்து உலக நாடுகளை திசை திருப்பவே இந்தியா இதுபோன்ற தகவல்களை வெளியிட்டு வருகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.இதற்கிடையே இரு நாட்டு பிரச்சினைக்கு போர் தீர்வாகாது என இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் கூறியுள்ளார். இது தொடர்பாக மேற்கு வங்காளத்தை தலைமையிடமாக கொண்டு வெளிவரும் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:–

பாகிஸ்தான் பயங்கரவாத நாடு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது போன்ற சொற்களால் எதுவும் நிறைவேற்ற முடியாது. உரி தாக்குதலை தொடர்ந்து நாம் ஒரு கடுமையான சூழலில் இருக்கிறோம். ஆனால் இதற்காக போர் நடவடிக்கை குறித்து ஒருபோதும் நினைக்கவில்லை. போர் ஒருபோதும் தீர்வாகாது. அதனால் மேலும் பிரச்சினைகள் தான் உருவாகும். எனவே போர் மனநிலை நம்மில் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கக்கூடாது.

இரு தரப்பும் முதிர்ச்சியை வெளிப்படுத்த வேண்டும். சில சமயங்களில் நம்மால் பேச்சுவார்த்தை நடத்த முடியாமல் போயிருக்கலாம். ஆனால் நமது பல்வேறு சவால்களை பேச்சுவார்த்தை மூலமாகவும், அமைதியான மனநிலையிலுமே அணுக முடியும். தற்போதைய கடினமான சூழலை ராஜதந்திர முறையில் சீர்படுத்த முடியும் என நான் நம்புகிறேன்.

உரி தாக்குதலில் பாகிஸ்தானுக்கு எந்த பங்கும் இல்லை. அது குறித்து எங்களுக்கு தெரியாது. உலகின் எந்த பகுதியிலும் தாக்குதல் நடத்துபவர்களின் தளமாக எங்கள் நாட்டை அனுமதிக்கக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இதையே எனக்கு சம்மன் அனுப்பியிருந்த உங்கள் வெளியுறவு செயலாளரிடமும் தெரிவித்தேன்.இவ்வாறு அப்துல் பாசித் கூறினார்.