உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என்று புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்தார்.
புதிய நீதிக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் சேப்பாக்கம், சுவாமி சிவானந்தா சாலையில் உள்ள அண்ணா அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு புதிய நீதிக்கட்சி நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம் தலைமை தாங்கினார்.
இதில் செயல் தலைவர் ஏ.ரவிக்குமார், பொதுச்செயலாளர் ஏ.வெள்ளைச்சாமி, இணை பொதுச்செயலாளர் ஆர்.டி.சேதுராமன், தலைமை நிலைய செய்தி தொடர்பாளர் ஆர்.முரளி உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் புதிய நீதிக்கட்சி நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகத்தின் பிறந்தநாளையொட்டி ‘கேக்’ வெட்டப்பட்டது. பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:-
* முதல்-அமைச்சர் ஜெயலலிதா விரைவில் பூரண குணம் அடைந்து தமிழக நலனுக்காக தொடர்ந்து பாடுபட வேண்டும் என்று வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறது.
* எம்.ஜி.ஆர். பிறந்தநாள் நூற்றாண்டுவிழாவினை ஓராண்டு காலம் சிறப்பாக கொண்டாடுவது என்றும், புதிய நீதிக்கட்சியின் சார்பில் முழு உருவ வெண்கல சிலை அமைப்பது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.
* நீதிக்கட்சியின் நூற்றாண்டு விழாவினை அதன் வாரிசான புதிய நீதிக்கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் ஓராண்டு காலம் சிறப்பாக கொண்டாட தீர்மானிக்கப்படுகிறது.
* உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்தும், கூட்டணி அமைப்பது குறித்தும் முடிவு எடுக்கும் அதிகாரம் நிறுவனத்தலைவர் ஏ.சி.சண்முகத்திடம் வழங்கப்படுகிறது என்பது உள்பட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர், இதுகுறித்து ஏ.சி.சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:-உள்ளாட்சி தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவோம். தனித்து போட்டி இல்லை. கூட்டணி அமைத்து தான் போட்டியிடுகிறோம். யாருடன் கூட்டணி? என்பது குறித்து விரைவில் அறிவிப்போம். பா.ஜ.க.வுடன் தற்போது நாங்கள் கூட்டணியில் இல்லை. அரசியல் சூழலுக்கு ஏற்ப அவர்களுடன் கூட்டணி அமைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.