போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட கறுப்பினத்தவர்

357 0

201609261015374868_charlotte-police-release-video-of-keith-scott-shooting_secvpfஅமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில் உள்ள சாரலோட் நகரில் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட கறுப்பினத்தவர் தொடர்பான வீடியோ காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கறுப்பு இனத்தவர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்படும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

அமெரிக்காவின் பெர்க்யூசன் பகுதியில் கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கறுப்பினத்தை சேர்ந்த வாலிபர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதேபோல், பொம்மை துப்பாக்கி வைத்திருந்த 12 வயது சிறுவனை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர்.

எவ்வித விசாரணையும் இன்றி கருப்பினத்தை சேர்ந்தவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்துவதாக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இதை எதிர்த்து ஆங்காங்கே போராட்டங்களும் நடத்தப்பட்டன. இந்நிலையில், இப்பிரச்சனை குறித்து மனித உரிமை ஆர்வலர்கள், சட்டத்துறை வல்லுநர்களை அமெரிக்க அதிபர் ஒபாமா சந்தித்து பேசினார்.

காவல்துறை விதிமுறைகளில் சில மாற்றங்கள் கொண்டுவர உள்ளதாக தெரிவித்த ஒபாமா, சம்பவத்தின் உண்மை தன்மையை கண்டறியும் வகையில், போலீசாரின் சீருடையில் சிறிய அளவிலான கேமரா பொருத்த உத்தரவிட்டார்.

போலீஸ் ரோந்து வாகனங்கள் மற்றும் ரோந்துப் பணியில் இருக்கும் போலீசாரின் சீருடையின் தோள்பட்டை பகுதியில் பொருத்துவதற்காக 50,000 கேமராக்கள் தயாரிக்கப்பட உள்ளதாக தெரிவித்த ஒபாமா, இதுபோன்ற துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அப்போது உறுதியளித்திருந்தார்.

அமெரிக்காவில் உள்ள நியூயார்க், வாஷிங்டன், லவுரெல், மேரிலேண்ட் ஆகிய முக்கிய நகரங்களில் சீருடையில் கேமராவுடன் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வடக்கு கரோலினா மாநிலத்தில் உள்ள சாரலோட் நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை (20-ம் தேதி) கறுப்பினத்தை சேர்ந்த கீத் லாமண்ட் ஸ்காட்(43) என்பவர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

குற்றவாளி ஒருவரை கைது செய்வதற்கு அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு போலீசார் பிடிவாரண்டுடன் சென்றபோது, அங்கு காரில் துப்பாக்கியுடன் வந்திறங்கிய ஸ்காட்டால் போலீஸ் அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என கருதி, பிரெண்ட்லி வின்சன் என்ற போலீஸ் அதிகாரி அவரை சுட்டுக்கொன்று விட்டார் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

ஆனால், ஸ்காட்டின் மனைவி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியின்படி, பள்ளி முடிந்து தங்கள் மகனை வீட்டுக்கு அழைத்து செல்வதற்காக ஸ்காட்டும் அவரது மனைவியான ரகியா ஸ்காட்டும் அப்பகுதியில் காரை நிறுத்திவைத்து காத்திருந்ததாக கூறப்படுகிறது.

ஸ்காட் தம்பதியர்

அங்குவந்த திடீரென வந்த போலீசார், காரில் அமர்ந்து புத்தகம் படித்து கொண்டிருந்த ஸ்காட்டை காரில் இருந்து வெளியே வரும்படி உத்தரவிட்டுள்ளனர். துப்பாக்கியை கீழே போட்டுவிட்டு, வெளியே வா என்று ஒரு போலீஸ்காரர் கூறியுள்ளார். இதையடுத்து, காரைவிட்டு கீழே இறங்கிய ஸ்காட், இரண்டு கைகளையும் தொங்கவிட்டபடி போலீசாரை நோக்கி பின்நோக்கியவாறு நடந்து வந்தார்.

அப்போது, ஒரு போலீஸ்காரர் ஸ்காட்டை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். என் கணவர் கையில் ஆயுதம் ஏதுமின்றி நிராயுதபாணியாக இருக்கிறார். அவரை சுடாதீர்கள் என்று ரகியா ஸ்காட் கூச்சலிட்டார். இதை பொருட்படுத்தாத பிரெண்ட்லி வின்சன் என்ற போலீஸ் அதிகாரி அடுத்தடுத்து நான்குமுறை துப்பாக்கியால் சுட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த ஸ்காட் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு கறுப்பு இனத்தவர் கண்டன போராட்டங்களை தொடங்கினர். அவர்களை கண்ணீர்ப்புகை குண்டுகளை வெடித்து போலீசார் விரட்டியடித்தனர். ஆனால் போராட்டக்காரர்கள், போலீஸ் வாகனங்களை தாக்கினார்கள். போலீசார் மீது கற்களையும், பாட்டில்களையும் வீசினர். இதில் 12 போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்தனர்.

ஸ்காட் கொல்லப்பட்ட இடத்தில் ஆயிரக்கணக்கான கறுப்பு இனத்தவர் திரண்டு வந்து, சாலையில் தடைகளை ஏற்படுத்தி கடந்த செவ்வாய்க்கிழமையில் இருந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.  இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது. இந்த சம்பவத்தால் சார்லோட் நகரில் வன்முறை வெடித்துள்ளது. அங்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டதையடுத்து அவசரநிலை பிறப்பிப்பதாக கரோலினா மாகாண கவர்னர் அறிவித்தார்.

காரில் இருந்து இறங்கிய ஸ்காட் தனது கையில் துப்பாக்கி வைத்திருந்ததாக கூறிய போலீசார், ஒரு துப்பாக்கியை கைப்பற்றியுள்ளதாகவும், அதில் ஸ்காட்டின் கைரேகை மற்றும் ரத்தக்கறை பதிந்துள்ளதாக செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட ஸ்காட்டின் மனைவி ரகியா போலீசாரின் நடவடிக்கைகளை தனது செல்போனில் பதிவு செய்திருந்தார். இந்த பதிவை கடந்த வெள்ளிக்கிழமை அவர் ஊடகங்களுக்கு வெளியிட்டார். அப்போது, நிராயுதபாணியாக காரைவிட்டு வெளியேவந்த ஸ்காட்டின்மீது போலீஸ் அதிகாரி துப்பாக்கியால் சுட்டது நிரூபணம் ஆனது. இதனால், போராட்டத்தில் ஈடுபட்டுவந்த கருப்பினத்தவர்கள் மேலும் ஆவேசம் அடைந்தனர்.

ரகியா ஸ்காட் தனது செல்போனில் படம்பிடித்த வீடியோ காட்சியை வெளியிட்டதுபோல் இச்சம்பவத்தின்போது தங்களது வீடியோ கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் பகிரங்கமாக வெளியிட வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். இந்த கோரிக்கைக்கு நாடு முழுவதும் உள்ள மனிதஉரிமை ஆதரவாளர்கள் ஆதரவு தெரிவித்தனர். அமெரிக்காவின் பிரபல ஊடகங்களும் இந்த கோரிக்கையில் நியாயம் இருப்பதாக கூறிவந்தன.

இந்நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது போலீசாரின் கேமராக்களில் பதிவாகி இருந்த சுமார் 25 வினாடிகள் ஓடும் இந்த வீடியோ வெளியான பின்னர், என்கவுன்ட்டர் என்ற பெயரில் கறுப்பினத்தவர்மீது அமெரிக்க போலீசார் நடத்தும் அராஜகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கறுப்பினத்தவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.