முள்ளிவாய்க்காலில் முக்குளித்து இழப்பதற்கு எதுவும் இன்றியும், கேட்பதற்கு நாதியற்றும் கழிந்து போன 7 வருடங்களின் பின் – சரி பிழைகள், விமர்சனங்களுக்கு அப்பால் ‘எழுக தமிழ’; ஊடாக மக்கள் எழுச்சி ஒன்று வடபுலத்தில் நிகழ்ந்தேறி இருக்கிறது. இந்த நிகழ்வு குறித்து வாதப்பிரதி வாதங்கள் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் குவிந்துகொண்டு இருக்கின்றன.
இந்த நிகழ்வு நல்லிணக்கத்திற்கு சாவு மணி என்கிறார்கள் சிலர். அரசியல் சாசனத்தின் ஊடாக தீர்வு காண எடுக்கப்படும் முயற்சிக்கு ஊறு விளைவிக்கும் செயல் என சிலர் குமுறுகிறார்கள். ‘எழுக தமிழ்’ வீழ்ந்து கொண்டிருக்கும் மகிந்த அணியினரை தூக்கி நிறுத்தும் என ஒப்பாரி பாடுகின்றனர் பலர். தவிரவும் ‘எழுக தமிழால்’ பெரும்பான்மை சிங்கள மக்கள் தீர்வை நோக்கிய முயற்சிக்கு பங்கம் விளைவிப்பார்கள் என கதறுகின்றனர் இன்னும் சிலர்..
அரை நுற்றாண்டு காலத்திற்கும் மேற்பட்ட இலங்கையின் இனத்துவ முரண்பாட்டு அரசியலை, மிகவும் நுணுக்கமாக கற்றுத் தேர்ந்த தெற்கு அரசியல் தலைவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை, தமிழ் அரசியல் தலைவர்களும், தரப்புகளும், கட்சிகளும் பெற்றுக்கொள்ளாமை தமிழ் மக்களின் சாபக்கேடா? அல்லது துர்ப்பாக்கியமா? புரியவில்லை… புரிந்தும் பயனில்லை…
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, பிரதமர் றணில் விக்கிரமசிங்க தலைமையிலான நல்லிணக்க அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பல்வேறு கட்சிகள், அரசியல் சாசனத்தில் உள்ள பல விடயங்களை எதிர்க்கிறார்கள். அதிகாரப் பகிர்வை நிராகரிக்கிறார்கள். இனவாதக் கருத்துக்களை தெரிவிக்கிறார்கள். தமது நிலைப்பாடுகள் கருத்தில் எடுக்கப்படாவிட்டால் தாம் புதிய அரசியல் அமைப்பின் உருவாக்கத்திற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்கிறார்கள். இவர்களை நல்லிணக்கத்திற்காக பாடுபடும் ஜனாதிபதியும் பிரதமரும், நல்லிணக்கத்திற்கு ஆதரவானவர்களும் எதிர்க்கவில்லை; திட்டவில்லை; துரோகிகள் ஆக்கவில்லை; அவர்களுடைய கருத்துக்களுக்கும் இடம்கொடுக்கிறார்கள்.
அண்மையில் மல்வத்தை பீடாதிபதியும், பேராயர் மல்லக்ம் ரஞ்சித்தும் பகிரங்கமாக அறிக்கை விட்டு இருந்தார்கள், இலங்கை சிங்கள பொத்த நாடு என்றே அழைக்கப்ட வேண்டும், அரசியல் யாப்பில் அதற்கு இருக்கும் முக்கியத்துவம் குறைக்கப்படக் கூடாது என்றார்கள்… அவற்றையும் நல்லிணக்க அரசாங்கத்தினர் விமர்சிக்கவில்லை. திட்டவில்லை வழமை போல் கண்ணை மூடிக்கொண்டு கடந்து சென்றுவிட்டார்கள்.
சுதந்திர இலங்கையின் பிரதமர் டீ.எஸ் சேனநாயக்கா, டட்லி சேனநாயக்கா, சேர். ஜோன் கொத்தலாவல, ஜே.ஆர் ஜெயவர்த்தன, றணசிங்க பிரேமதாஸா, DB விஜயதுங்க, றணில் விக்கிரமசிங்க வழிவந்த ஐக்கியதேசியக் கட்சியோ, S.W.R.D பண்டாரநாயக்கா. தகநாயக்கா. சிறிமாவோ பண்டாரநாயக்கா, சந்திரிக்கா குமாரதுங்க பண்டாரநாயக்கா, மகிந்த ராஜபக்ஸ வழிவந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியோ, இனப்பிரச்சனைக்கான தீர்வு முயற்சிகளின் போது, அதற்கு எதிராக வெளிக் கிழம்பிய இனவாத சக்த்திகளை, கட்சிகளை, தலைவர்களின் வளர்ச்சிகளை மனதார விரும்பினார்கள். அவற்றை கண்டும் காணாது விட்டார்கள். மறைமுகமாக ஆதரவும் வழங்கி வந்தார்கள். காரணம் சிறுபான்மை மக்களுக்கான தீர்வு முயற்சிகள், பேச்சுவார்த்தைகள் வரும் போது, அல்லது சர்வதேச அழுத்தங்கள் வரும் போது தமக்கு சிங்கள மக்கள் மத்தியில் பாரிய எதிர்ப்பு வரும், அரசாங்கங்களை கவிழ்த்துவிடுவார்கள் அதனால் அவர்களையும் சமாளித்து தான் முன்நோக்கி செல்ல வேண்டும் என தீர்வு முயற்சிகளை தட்டிக் கழிப்பதற்காக, அவர்களை வளர விடுவார்கள்… தமது கட்சிகளுக்குள் இனவாதம் பேசுபவர்களை, அடக்கவோ, கண்டிக்கவோ, அவர்கள் விரும்புவதில்லை. சிலவேளை பலமான விமர்சனங்கள் எழுந்தால், மெல்லிதாக அடிப்பது போல் தடவி விடுவார்கள்.
ஆனால் தமிழ் அரசியலின் சாபக் கேடோ அல்லது தமிழ் மக்களின் துர்ப்பாக்கியமோ தெரியாது, தம்மை தமிழர்களின் தலைவர்களாகவும், மீட்பர்களாகவும் காட்டிக் கொள்ளும் எவரிடமும, இத்தகைய அரசியல் சாணக்கியத்தை காண முடியவில்லை…
கடந்த அரை நுற்றாண்டுக்கு மேற்பட்ட இனத்துவ முரண்பாட்டையும், சிங்கள மேலாதிக்க பேரினவாதக் கோட்பாட்டையும், மென்வலுவாலும், வன்வலுவாலும், தெற்கின் அரசியல், சமநிலைப்படுத்திக் கொண்டே செல்கிறது.
ஆனால் தமிழ் அரசியலில், ஒன்றில் மென்வலு மேலோங்கி வன்வலுவை கீழ்மைப்படுத்தி ஆதிக்கம் செலுத்தும். ஆயுதப் போராட்த்திற்கு முன்னரும் பின்னரும் இந்த நிலமையை காணலாம். இல்லை எனில், வன்வலு மென்வலுவை அடக்கி, ஆயுத பலத்தால் நசுக்கி, கோலோச்சும். 80களின் நடுப்பகுதியில் இருந்து 2009 வரை இதனை அவதானித்திருக்க முடியும். அடக்கி ஒடுக்கப்படும் மக்களின் இனவிடுதலைக்கு, அல்லது அரசியல் தீர்வை நோக்கிய முன் நகர்விற்கு, இவை இரண்டும் அவசியம் என்பதனை முள்ளி வாய்க்காலின் பின்னும் தமிழ் அரசியல் புரிந்து கொள்ளவில்லை.
புரிந்திருந்தால், அரசாங்கத்தின் நல்லிணக்க முயற்சிகளில், அரசியல் ரீதியான பேச்சுக்களில், ராஜதந்திர நடவடிக்கைகளில், அரசியல் காய்நகர்த்தல்களில், பாராளுமன்றில் அங்கத்துவம் வகிக்கும் தமிழ் கட்சிகள், அவற்றின் பிரதிநிதிகள் பங்கெடுக்கும் அதே வேளை, தமிழ் மக்கள் பேரவை போன்ற அமுக்கக் குழுக்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், மக்கள் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், பொது அமைப்புகள் தமது கோரிக்கைகளை முன்னிறுத்திய மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டங்களை நடத்துவதை ஏற்றுக் கொண்டு இருக்க வேண்டும். அல்லது தெற்கின் பிரதான அரசியட் கட்சிகள் தலைவர்கள் போல் மெனனம் காத்திருக்க வேண்டும். ஆனால் தமிழ் அரசில் பரப்பில் அத்தகைய மனப் பக்குவம் எவருக்கும் இருப்பதாக தெரியவில்லை.
எது நடப்பினும் அது தமமது தரப்பினாலோயே நடக்க வேண்டும் என நினைப்பவர்களும், இத்தகைய மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் தமது அரசியலை, தமது இருப்பை கேள்விக்கு உட்படுத்தும் என அஞ்சுபவர்களும், தமிழ் மக்களின் தலைமைகளாக முடிசூடியிருக்கும் தமக்கு, தமது இருப்புக்கு ஆபத்து வந்துவிடும் என நினைப்பவர்களும் இவ்வாறான மக்கள் எழுச்சிகளை விடப்போவதும் இல்லை விரும்பப் போவதும் இல்லை.
‘எழுக தமிழ்’ நிகழ்வை எதிர்பவர்கள், விமர்சிப்பவர்கள், இந்த நிகழ்வு நல்லிணக்த்தை பாதிக்கும் என வருந்துபவர்கள் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். யாழ்ப்பாணத்தின் பிரதான பத்திரிகை ஒன்று இந்த நிகழ்வை பற்றி கண்டு கொள்ளாமலே விட்ட போதும், வீடுகளுக்கு பேருந்துகள் செல்லாமல் இருந்த போதும், கட்டாயப்படுத்தி மக்களை இழுத்துச் செல்லாத போதும், உணவுப் பொதிகள், சன்மானங்கள், வாக்குறுதிகள் வழங்காமல் இருந்த போதும், ஒரு பெருந்திரலான மக்கள் கூட்டம் வீதிகளில் இறங்கினார்கள் என்றால், வணிகர்கள் தமது வியாபார ஸ்தாபனங்களை மூடினார்கள் என்றால், பேதங்களை மறந்து பலர் ஒருங்கிணைந்தார்கள் என்றால் நல்லிணக்கத்தை, நல்லிணக்க முயற்சிகளை ‘எழுக தமிழ்’ குழப்பவில்லை. நல்லிணக்கம் தானாக குழம்புகிறது… அதுவே எழுகதமிழாகியது.