பிரான்சில் இடம்பெற்ற கேணல் பரிதி அவர்களின் 6 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வும் கண்டன ஒன்று கூடலும்!

684 0

பாரிசில் 08.11.2012 அன்று படுகொலை செய்யப்பட்ட தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சின் பொறுப்பாளர் கேணல் பரிதி அவர்கள் 6 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு இன்று (08.11.2018) வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு அவர் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் மலர்வணக்கமும், சுடர்வணக்கமும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கேணல் பரிதி அவர்களின் தாயார் சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினார்.

தொடர்ந்து கேணல் பரிதி அவர்களின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ள பந்தன் கல்லறையில் பகல் 11.00 மணிக்கு நினைவு வணக்க நிகழ்வு இடம்பெற்றது. ஆரம்ப நிகழ்வாக கேணல் பரிதி அவர்களின் கல்லறைமீது தமிழீழத் தேசியக்கொடி போர்த்தி மதிப்பளிப்புச்செய்யப்பட்டது. இந்நிகழ்வில் பொதுச்சுடரினை தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை மேலாளர் திருமதி நகுலேஸ்வரி அரியரட்ணம் அவர்கள் ஏற்றி வைத்தார். ஈகைச் சுடரினை கேணல் பரிதி அவர்களின் சகோதரன் ஏற்றிவைக்க கல்லறைக்கான மலர் மாலையினை கேணல் பரிதியில் சகோதரரும், கேணல் பரிதியின் புதல்வியும் அணிவித்து மலர்வணக்கம் செலுத்தினர்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் மலர் வணக்கம் செலுத்தி, சுடர் வணக்கம் செய்தனர்.
தொடர்ந்து பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா அவர்கள் நினைவுரை ஆற்றினார். அவர்தனது உரையில் எத்தனை வருடங்கள் சென்றாலும் எத்தனை காலங்கள் சென்றாலும் இந்த மாவீரர்களுடைய அர்ப்பணிப்பு மிக்க போராட்டம் ஒரு நாள் வெல்லும் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் பயணித்துக்கொண்டிருக்கும் நேரத்திலே, சர்வதேசம் ஒரு காலத்திலே எங்களுடைய வீரர்களுக்கு பயங்கரவாத முத்திரைகுத்தப்பட்டு, நசுக்க முற்பட்ட வேளை, அந்தப் போராட்டத்திற்கு மேலாக போராட்டம் நடத்தவேண்டிய சூழலில் நாங்கள் இருந்திருந்தோம். அந்த பயங்கரவாத முத்திரையில் கேணல் பரிதி அவர்களும் அடங்கியிருந்தார். இன்று சர்வதேசம் விடுதலைப் புலிகளை உணர்ந்துகொள்ளும் காலம் நெருங்கிவருகின்றது. எனவே, நாங்கள் இன்னும் வலுவாகப் போராடவேண்டிய தேவையை சிங்களதேசம் எமக்குத் தந்துள்ளது. அதனை நெஞ்சில் நிறுத்தி உத்வேகத்துடன் பயணிப்போம் என்றார். தொடர்ந்து தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் கல்லறைவணக்க நிகழ்வு நிறைவடைந்தது.

மாலை 15.00 மணி தொடக்கம் 17.00 மணிவரை பிரான்சு பாராளுமன்ற முன்றலில், பாரிசில் 26.10.1996 அன்று படுகொலை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் அனைத்துலக நிதிப் பொறுப்பாளர் லெப்.கேணல் நாதன், ஈழமுரசு நிறுவக ஆசிரியர் கப்படன் கஜன் மற்றும் 08.11.2012 அன்று பரிசில் படுகொலை செய்யப்பட்ட தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சின் பொறுப்பாளர் கேணல் பரிதி ஆகியோரின் படுகொலைக்கு நீதி கோரி கவனயீர்ப்பு ஒன்று கூடலும் இடம்பெற்றது. இந்நிகழ்வுகளில் உணர்வாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – ஊடகப் பிரிவு)

Leave a comment