ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக உயிர் பலியியேனும் கொடுக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அணி தயாராகி விட்டுள்ளதுடன் எதிர்வரும் புதன்கிழமை இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வில் பல்வேறு சதித்திட்டங்களை அரங்கேற்றவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் துசார இந்துநில் , ஜனநாயகத்தையும் மக்கள் ஆணையையும் உறுதிப்படுத்த அனைத்து சவால்களையும் எதிர்கொள்ள ஐக்கிய தேசிய கட்சி தயாராக உள்ளதாவும் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசிய கட்சி இன்று வெள்ளிக்கிழமை அலரிமாளிகையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் துசார இந்துநில் இதனை குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மைத்திரியின் பொருத்தமற்ற சதித்திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு இன்று தெளிவாகிவிட்டது. அதேபோன்று 14 நான்காம் திகதி ஜனாதிபதி எந்த சதித்திட்டத்தை உபயோகித்தாலும் அதனை ஐக்கிய தேசிய கட்சி எதிர்கொள்ள தயாராகவே உள்ளது. பெரும்பான்மை உள்ளது என்ற நம்பிக்கையிருந்தால் பெரும்பான்மையை நிருபித்து ஆட்சி பொறுப்பினை ஏற்க வேண்டும். அவ்வாறு இல்லா விட்டால் ஜனாதிபதிக்கு எதிரான நடவடிக்கையை ஐக்கிய தேசிய கட்சி பிரேயோகிக்க வேண்டி ஏற்படும் என்றார்.