நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் தலையீடு செய்யும் பன்னாட்டு இராஜதந்திர பிரதிநிதிகள்,அவர்களது நாட்டில் ஏற்படும் உள்ளக விவகாரங்களில் எமது நாட்டு அதிகாரிகள் தலையீடு செய்வதனை அனுமதிப்பார்களா? தற்போது தலையீடு செய்யும் நாடுகளில் அநேகமானவை கடந்த 2015ஆம் ஆண்டில் தேசிய அரசாங்கத்தை அமைப்பதில் பங்களிப்புச் செய்திருக்கின்றன என தேசிய நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பன்னாட்டுப் பிரதிநிதிகளுடன் சபாநாயகர் கரு ஜயசூரிய மேற்கொண்டுவரும் கலந்துரையாடல்கள் தொடர்பில் வாசுதேவ நாணயக்கார சபாநாயகருக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அக்கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
குறிப்பாக அமெரிக்க மற்றும் பிரித்தானிய இராஜதந்திரிகளும், ஏனைய மேற்குலக நாடுகளின் பிரதிநிதிகளும் உங்களுடனான கலந்துரையாடல்களில் முக்கியம் பெறுகின்றனர்.
பிரதமர் நியமனம் தவறானது எனக் கருத்து வெளியிட்டு வருகின்ற மேற்குறிப்பிட்ட நாடுகளில் சில 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்ற தேர்தலில் அரசாங்கத்தை மாற்றுவதற்காக உங்களைப் போலவே பல்வேறு வகையிலும் பங்களிப்புச் செய்திருந்தன என்பதே அனைவரும் அறிந்த இரகசியமாக உள்ளது.
தற்போது எமது நாட்டின் விவகாரங்களில் அக்கறை செலுத்தியுள்ள ஏனைய நாடுகளின் பாராளுமன்றங்களில் ஏதேனும் சிக்கல்நிலை தோன்றுமாயின்,அந்நாடுகளில் உள்ள இலங்கையின் தூதரக அதிகாரிகள் அவ்விடயங்களில் தலையிடுவதற்கு அந்தந்த நாடுகளின் சபாநாயகர்கள் அனுமதிப்பார்களா என்று கேள்வி எழுப்ப விரும்புகின்றேன்.