அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட பிரதமரை நீக்க வேண்டும் எனின் அவர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் அதனைச் செய்ய முடியும். எனினும் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வருவதற்கு அரசியலமைப்பின்படி வரையறைகள் உள்ளன. பாராளுமன்றம் பிற்போடப்பட்டுள்ள போது நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வருவது அரசியலமைப்பிற்கு முரணானதாகும் என விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.
எனவே எதிர்வரும் 14 ஆம் திகதி பாராளுமன்றம் கூடுகின்ற போது நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடத்தப்படும் என்ற சபாநாயகரின் கருத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே சபாநாயகர் அரசியலமைப்பின் பிரகாரம் செயற்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தேசிய அரசாங்கத்திலிருந்து விலகுவதாக அறிவித்ததன் மூலம் அரசியலமைப்பின்படி அமைச்சரவைக்குரிய அங்கீகாரம் இழக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை இல்லாதவிடத்து பிரதமர் தானாகவே பதவியிழப்பார். அதேவேளை பாராளுமன்றத்தில் அதிகளவானோரின் நம்பிக்கையினை யார் பெற்றுள்ளதாக ஜனாதிபதி கருதுகின்றாரோ அவரைப் பிரதமராக நியமிப்பதற்கான அதிகாரம் உள்ளது. எனவே பிரதமர் நியமனம் அரசியலமைப்பிற்கு அமையவே இடம்பெற்றுள்ளது.