‘பா.ஜ.க., அ.தி.மு.க. அரசுகளை ஒரே நேரத்தில் வீழ்த்துவோம்’ மு.க.ஸ்டாலின் ஆவேசம்

301 0

பா.ஜ.க., அ.தி.மு.க. அரசுகளை ஒரே நேரத்தில் வீழ்த்துவோம் என்று பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக கூறினார்.

மத்திய பா.ஜ.க. அரசு, தமிழக அ.தி.மு.க. அரசை கண்டித்து தி.மு.க. சார்பில் பெரம்பலூரில் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் பேசியதாவது:-
மத்தியிலே நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய பாசிச பாரதீய ஜனதா ஆட்சியையும், தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய ஊழல் நிறைந்த அ.தி.மு.க ஆட்சியையும் ஒரே நேரத்தில் நாட்டை விட்டு அப்புறப்படுத்த வேண்டும் என்ற அந்த உணர்வோடு ஒரு ஜனநாயக போரினை இந்த பெரம்பலூரில் நான் தொடங்கி இருக்கிறேன்.
நம்முடைய இந்திய தேசத்திற்கு ஒரு புதிய பிரதமரை உருவாக்குவதற்கு நாடாளுமன்றத்தினுடைய தேர்தலை நாமெல்லாம் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறோம். ஒருவேளை நாடாளுமன்றத் தேர்தல் மாத்திரம் வருகின்றதா அல்லது நாமெல்லாம் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிருக்கக்கூடிய சட்டமன்றத் தேர்தலும் சேர்ந்து வரப்போகிறதா?. அது எந்த நிலையில் வந்தாலும், எப்படிப்பட்ட சூழலில் வந்தாலும், எந்த நேரத்தில் வந்தாலும், அதை நாம் சந்திக்கத் தயாராக இருக்கிறோம் என்று அறிவிக்கின்ற கூட்டம்தான் இந்தக் கூட்டம் என்பதை யாரும் மறந்துவிட முடியாது.
இன்றைக்கு தமிழ்நாட்டிலே ஊழல் நிறைந்த ஆட்சியாக அ.தி.மு.க ஆட்சியையும், மத்தியிலே பாசிச பாரதீய ஜனதா ஆட்சியையும் ஒரேயடியாக இந்த நாட்டை விட்டு விரட்டக்கூடிய வல்லமை நம்முடைய தி.மு.க.வுக்கு தான் உண்டு.
இன்று (நேற்று) ஒரு முக்கியமான நாள். இந்த நாளை நாம் மறந்துவிட முடியாது, மறந்து விடவும் கூடாது. ‘டிமானிடைசேஷன்’ (பணமதிப்பு நீக்கம்) என்று சொல்லுகிறோமே அது அறிவிக்கப்பட்ட நாள். 2016-ம் ஆண்டு இதே நவம்பர் 8-ம் நாள். இந்தியாவில் இருக்கக்கூடிய 120 கோடி மக்களையும் ஒரே நேரத்தில் முட்டாள் ஆக்கினாரே மோடி.
1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த நேரத்தில் மோடி சொன்ன விளக்கங்கள், கருப்பு பணம் ஒழியும்! ஊழல் அடியோடு ஒழிக்கப்படும்! கள்ளநோட்டு குறையும்! பயங்கரவாதம் அடக்கப்படும்! ஏதோ மோடி மஸ்தான் வித்தை என்று சொல்வார்களே அதுபோல மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இன்றோடு 2 ஆண்டுகள் முடிந்திருக்கக்கூடிய இந்த நேரத்தில், இந்த மேடையில் இருந்துகொண்டு தி.மு.க. சார்பில் நான் கேட்கின்ற கேள்வி, இன்றைக்கு நாட்டில் கருப்பு பணம் இல்லையா? ஊழல் இல்லையா? கள்ளநோட்டு இல்லையா? பயங்கரவாதம் ஒழிந்து விட்டதா? இதனால் என்ன சாதித்தார் மோடி? ஒன்றுமே கிடையாது.
மோடி தலைமையில் இருக்க கூடிய இந்த பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்திட நாம் எல்லாம் தயாராக வேண்டும், தயாராகி விட்டோம் என்பதை எடுத்துக்காட்ட தான் இந்த கூட்டம்.
அதனுடைய முன்னோட்டமாகத்தான் அதனுடைய வெளிப்பாடுதான் அண்மையிலே ஆந்திர மாநிலத்தினுடைய முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு அகில இந்திய காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசியிருக்கிறார். நாளைய தினம்(இன்று) தமிழ்நாட்டுக்கு வருகிறார் சந்திரபாபு நாயுடு. என்னை சந்திக்க இருக்கிறார்.
அவருடன் பேச்சுவார்த்தை நடைபெறுகின்ற நேரத்தில் நிச்சயமாக, உறுதியாக சொல்லுகிறேன் மாநில உரிமையை எந்தநிலையிலும் எப்படிப்பட்ட சோதனைகள் வேதனைகள் வந்தாலும் நாம் அந்த உரிமையை விட்டுக்கொடுக்க கூடாது என்ற செய்தியை தான் நாம் நிலைநாட்ட இருக்கிறோம். ஆகவே தான், மாநில கட்சிகள் அத்தனையும் ஒன்று சேர வேண்டும் என்ற அந்த நிலை இன்றைக்கு உருவாகி வந்துகொண்டிருக்கிறது.
ஒரு மாநிலத்தை ஆளக்கூடிய ஒரு முதல்-அமைச்சர் (எடப்பாடி பழனிசாமி) சி.பி.ஐ. விசாரணையில் சிக்கி இருப்பது இதுதான் இந்தியாவில் முதன்முறை. இதைவிட வெட்கக்கேடு தமிழகத்துக்கு வேறு எதுவும் வந்து சேரப்போவதில்லை.
அதுமட்டுமல்ல, துணை முதல்-அமைச்சராக இருக்கக் கூடிய ஓ.பன்னீர்செல்வம், லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையிலே சிக்கி இருக்கிறார். அமைச்சர் விஜயபாஸ்கர், வருமான வரித்துறையிடம் சிக்கியிருக்கிறார். அமைச்சர்களாக இருக்கக்கூடிய வேலுமணி, தங்கமணி மீது விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
கொசு எப்படி டெங்குவை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறதோ, அதேபோல கோட்டையிலே இருக்கக்கூடிய இவர்கள் ஊழலை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறார்கள். ஊழல் நிறைந்த அந்தக் கொசுக்களை விரட்டுவதற்கு மருந்து யாரிடத்தில் இருக்கிறது என்றால், உங்களிடத்தில் தான் இருக்கிறது, மறந்து விடக்கூடாது.
மதவாதத்திற்கு எதிராக ஒரு போர், அடக்குமுறைக்கு எதிராக ஒரு போர், ஆணவ நடவடிக்கைகளுக்கு எதிராக ஒரு போர், விலைவாசிக்கு எதிராக ஒரு போர், இந்தி திணிப்புக்கு எதிராக ஒரு போர், ஊழலுக்கு எதிராக ஒரு போர், லஞ்சத்துக்கு எதிராக ஒரு போர், சர்வாதிகாரத்திற்கு எதிராக ஒரு போர். இப்படி தனித்தனி போர் நடத்திக் கொண்டிருப்பதை விட ஒரே ஒரு போர் பாசிச பா.ஜ.க ஆட்சிக்கும், ஊழல் நிறைந்த அ.தி.மு.க ஆட்சிக்கும் நடத்துகின்ற போர்.
டெல்லி செங்கோட்டையில் இருக்கக்கூடிய ஆட்சியையும், சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருக்கக்கூடிய அ.தி.மு.க. ஆட்சியையும் ஒரே நேரத்திலே வீழ்த்துவோம். அந்த போருக்கு இந்த பெரும்புலியூர் எனப்படும் இந்த பெரம்பலூர் தொடக்கமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Leave a comment