வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் டிரம்புடன் பத்திரிகையாளர்கள் மோதல்

308 0

வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் டிரம்புடன் பத்திரிகையாளர்கள் மத்தியில் நிகழ்ந்த சர்ச்சை அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அமெரிக்க நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நேற்றுமுன்தினம் இரவு 7 மணிக்கு ஜனாதிபதி டிரம்ப் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அந்த பேட்டியின்போது சி.என்.என். டெலிவிஷன் நிருபர் அகோஸ்டா மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு அகதிகளாக வருவோர் பற்றி டிரம்ப் கூறிய கருத்துக்கு எதிராக கேள்வி எழுப்பினார். நாடு கடந்து அகதிகள் வருவது படையெடுக்க அல்ல என்று அவர் கூறினார்.

அதைக் கேட்ட டிரம்ப் ஏளனமாக, “ஓ எனக்கு சொல்கிறீர்களா, நன்றி. பாராட்டுக்கள்” என்றார்.

“அவர்களை ஏன் அப்படி சொன்னீர்கள்?” என அந்த நிருபர் மீண்டும் கேள்வி கேட்க, “நான் அவர்கள் படையெடுக்க வருவதாகத்தான் கருதுகிறேன். உங்களுக்கும் எனக்கும் மாறுபட்ட கருத்து இருக்கிறது” என டிரம்ப் கூறினார்.

இப்படி இருவருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் டிரம்ப், “என்னை இந்த நாட்டை வழிநடத்த அனுமதியுங்கள். நீங்கள் சி.என்.என். டி.வி. சேனலை நடத்துங்கள். நீங்கள் அதை நன்றாக செய்தால் ‘ரேட்டிங்’ (பார்வையாளர்கள் எண்ணிக்கை) கூடும்” என கூற, அந்த நிருபர் மேலும் கேள்வி கேட்க முயற்சிக்க, அவரிடம் இருந்து வெள்ளை மாளிகை பணியாளர் ஒருவர் ஒலிபெருக்கியை பறித்து வேறு ஒரு நிருபருக்கு தர முயற்சிக்க அவர் தர மறுக்க பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அந்த நிருபரை பயங்கரமான ஆள் என டிரம்ப் கூறியது சர்ச்சையை உண்டாக்கியது.

இந்த சம்பவத்தின் போது பிற நிருபர்கள் சி.என்.என். நிருபருக்கு ஆதரவாக பேசினர். கடைசியில் சி.என்.என். நிருபர் அகோஸ்டாவின் வெள்ளை மாளிகை அனுமதிச்சீட்டு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a comment