தமிழகத்தின் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 7,728 உயர்நிலை, மேல் நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகைப் பதிவுக்கு பயோமெட்ரிக் கருவியை பொருத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள ஆணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு தொட்டுணர் கருவி என்ற பயோ-மெட்ரிக் வருகைப் பதிவு முறை அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பை சட்டசபையில் 2018-19-ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரின்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்களின் தினசரி வருகையை பதிவு செய்ய பயோமெட்ரிக் கருவி பொருத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. பயோமெட்ரிக் கருவி அல்லது டாப் என்ற கணினி மூலம் வருகைப் பதிவு நடத்தவும் ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்தநிலையில், முதல்கட்டமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் 3,688 உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் 41 ஆயிரத்து 805 பேருக்கும், 4,040 மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 774 பேருக்கும், ரூ.15.30 கோடி செலவில் பயோமெட்ரிக் முறையில் வருகையை பதிவு செய்யலாம் என்று தேசிய தகவல் தொடர்பு மைய முதுநிலை தொழில்நுட்ப இயக்குனர் மற்றும் தகவலியல் அதிகாரி கேட்டுக்கொண்டார். அதை பள்ளிக்கல்வி இயக்குனரும் பரிந்துரைத்தார்.
அதை அரசு கவனமுடன் பரிசீலித்து, இந்த 7,728 பள்ளிகளிலும் பயோமெட்ரிக் கருவியை பொருத்தி ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்ய அரசு ஆணை பிறப்பித்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.