சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை தொடர்ந்து, தீபாவளி அன்று நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக தமிழகம் முழுவதும் 2,190 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பட்டாசு புகையினால் மாசு ஏற்படுவதை தடுக்க தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதற்கு சில கட்டுப்பாடுகளை விதித்து சமீபத்தில் தீர்ப்பு கூறிய சுப்ரீம் கோர்ட்டு, 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து தமிழகத்தில் தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. இந்த நேர கட்டுப்பாட்டை கண்டிப்பாக கடைப்பிடிக்கவேண்டும் என்று கூறிய தமிழக அரசு, அதிக ஒலி எழுப்பும் சரவெடி போன்ற பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் பொதுமக்களை கேட்டுக்கொண்டது.
அத்துடன், பொதுமக்கள் பட்டாசு வெடிப்பதை கண்காணிக்க தமிழகம் முழுவதும் சுமார் 500 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருப்பதாக கூறிய ஒரு அதிகாரி, கோர்ட்டு உத்தரவை மீறி பட்டாசு வெடித்தால் அது கோர்ட்டு அவமதிப்பு செயல் என்றும் தெரிவித்தார்.
கோர்ட்டு அவமதிப்பு செயலுக்காக இந்திய தண்டனை சட்டம் 188-வது பிரிவின் கீழ் 6 மாதம் சிறை தண்டனை அல்லது ரூ.1,000 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்க வழிவகை உள்ளது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால் நேர கட்டுப்பாட்டை மீறும் வகையில், தீபாவளி அன்று தமிழகம் முழுவதும் பல இடங்களில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. சென்னையில் பட்டாசு சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. இரவு 10 மணிக்கு மேலும் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.
பட்டாசு வெடித்தவர்களை, தமிழகம் முழுவதும் போலீசார் கண்காணித்தனர்.
அதன்படி, நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக தமிழகம் முழுவதும் 2,190 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 359 பேர் மீதும், குறைந்தபட்சமாக தேனி மாவட்டத்தில் 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
சில இடங்களில் நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தவர்கள் பற்றி அந்த தெருவில் உள்ளவர்களே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு வந்து நடவடிக்கை எடுத்தனர்.
மாவட்ட வாரியாக போடப்பட்ட வழக்குகள் எண்ணிக்கை விவரம் வருமாறு:-
சென்னை-359
கோவை-184
விழுப்புரம்-160
விருதுநகர்-134
நெல்லை-133
மதுரை -124
திருப்பூர்-108
திருவள்ளூர்
திருவள்ளூர்-105
திருவண்ணாமலை-97
சேலம்-93
காஞ்சீபுரம்-79
சிவகங்கை-66
திருச்சி-64
வேலூர்-55
நாமக்கல்-46
கடலூர்-41
திண்டுக்கல்-38
கிருஷ்ணகிரி-37
ராமநாதபுரம்-34
தூத்துக்குடி
தூத்துக்குடி-34
நாகப்பட்டினம்-31
திருவாரூர்-25
கன்னியாகுமரி-23
தஞ்சாவூர்-21
தர்மபுரி-17
நீலகிரி-16
புதுக்கோட்டை-16
ஈரோடு-14
பெரம்பலூர்-11
கரூர்-11
அரியலூர்-9
தேனி-5
பல இடங்களில், நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த பலரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
வழக்கு போடப்பட்டவர்கள் மீது கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
புதுச்சேரி பிராந்தியத்தில் 25 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்கள் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்த சிறுவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினார்கள்.