ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்புக்கு அமைவாக செயற்பட வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தைக் கூட்டி அரசியலமைப்பு நெருக்கடிக்கு தீர்வு காணுமாறும் வலியுறுத்தி, நூற்றுக்கணக்கான பௌத்த பிக்குகள் நேற்று கொழும்பில் பேரணியில் ஈடுபட்டனர்.
கொழும்பு நகர மண்டபத்தில் நேற்று பிற்பகல் கூடிய பௌத்த பிக்குகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்புக்கு அமைவாக செயற்பட வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தைக் கூட்டி அரசியலமைப்பு நெருக்கடிக்குத தீர்வு காணுமாறும் தீர்மானம் நிறைவேற்றினர்.
மகா சங்கத்தின் இந்த தீர்மானம், ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக பதவிக்குக் கொண்டு வருவதற்கு அல்ல, ஜனநாயகத்தைப் பாதுகாக்கவே கொண்டு வரப்பட்டுள்ளது என்று வண. ஹடிகல்லே விமலசார தேரர் தெரிவித்தார்.
நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதே துறவிகளான எமது கடமை. நாடு நெருக்கடியான நிலையில் இருந்த போதெல்லாம், பௌத்த பிக்குகள், அரச தலைவர்களுக்கு வழிகாட்டிகளாக இருந்து சரியான வழியில் செல்வதற்கு உதவியுள்ளனர்” என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவிதமான கருத்தை வெளியிட்ட வண.பத்தரமுல்ல தயாவன்ச தேரர், நாட்டில் அமைதியையும், இஅஅயல்பு நிலையையும் உருவாக்க ஒத்துழைப்பது பௌத்த பிக்குகளின் கடமை என்று குறிப்பிட்டுள்ளார்.