இலங்கையில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான அனைவருக்கும் இலவச சிகிச்சைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில், எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ்ஸை தடுப்புக்கான நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வறிக்கை வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.
சர்வதேச நிதியத்தால் வழங்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீட்டின் மூலம், தெரிவுசெய்யப்பட்ட எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களுக்கு மாத்திரமே இதுவரை சிகிச்சையளிக்கப்பட்டு வந்துள்ளது.
இதேவேளை, வாலிப வயதினருக்கான சுகாதார கொள்கையொன்றை தயாரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித மஹீபால தெரிவித்துள்ளார்.
இந்த கொள்கைத் திட்டம் தொடர்பில், வாலிபர்களுக்கு விழப்புணர்வூட்டும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இதுதவிர பாடசாலை பாடவிதானங்களிலும் பாலியல் தொடர்பான அறிவை மாணவர்களுக்கு பெற்றுக் கொடுத்தல் அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.