ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிரதமரை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த சபாநாயகர் தற்போது அதனை நிராகரிப்பதாக தெரிவிப்பது அரசியல் ரீதியிலான சர்ச்சைகளை ஏற்படுத்தும் செயலாகும். அத்துடன் சபாநாயகரின் கூற்று அரசியலமைப்புக்கு முரணாகும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.
தேசிய ஐக்கிய முன்னணி இன்று கொழுப்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
ஜனாதிபதி அரசியலமைப்புக்கு உட்பட்டே பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ்வை நியமித்துள்ளார். அதனால்தான் சபாநாயகர் ஆரம்பத்தில் ஜனாதிபதியின் நியமனத்தை ஏற்றுக்கொண்டார்.
தற்போது பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை காட்டும்வரை இருந்த பிரதமரையே ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார். சபாநாயகரின் இந்த கூற்றானது அரசியல் ரீதியில் நாட்டுக்குள் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடியதாகும். அத்துடன் அரசியலமைப்புக்கும் முரணாகும்.
ஹிந்த ராஜபக்ஷ் பிரதமராக நியமிக்கப்பட்டாலும் ராஜபக்ஷ்வினருக்கு எதிராக தொடுக்கப்பட்டிருக்கும் வழக்குகள் யாவும் முறையாக இடம்பெறும். அதுதொடர்பில் நாங்கள் அவதானமாக இருப்போம். அத்துடன் மஹிந்த ராஜபக்ஷ் கடந்த காலத்தில் அவருடன் சுற்றியிருந்தவர்களின் பேச்சைக்கேட்டு மேற்கொண்ட தவறுகளை மீண்டும் செய்யமாட்டார் என்று நம்புகின்றோம் என்றார்.