பிரதமர் ஒருவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பையே ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்கவேண்டும் என ஐக்கியதேசிய கட்சி பொலிஸ்மா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஐக்கியதேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நளின்பண்டார தயாகமகே பாலித தேவப்பெரும ஆகியோர் இந்த வேண்டுகோள் அடங்கிய கடிதமொன்றினை பொலிஸ்மா அதிபரின் அலுவலகத்தில் வழங்கியுள்ளனர்.
நாங்கள் அலுவலகத்திற்கு சென்றவேளை அங்கு பொலிஸ்மா அதிபரோ வேறு எந்த சிரேஸ்ட அதிகாரியோ இருக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக அங்கு காணப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரிடம் கடிதத்தை கையளித்துவிட்டு பொலிஸ்மா அதிபரை தொலைபேசியில் தொடர்புகொண்டு தெரிவித்தோம் என அவர் தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் ரணில் விக்கிரமசிங்கவையே பிரதமராக ஏற்றுக்கொண்டுள்ளார் இதன் காரணமாக பிரதமரிற்கு வழங்கப்படும் பாதுகாப்பை அவரிற்கு வழங்குமாறு பொலிஸ்மா அதிபரை கேட்டுக்கொண்டுள்ளோம் என நளின் பண்டார தெரிவித்துள்ளார். 26 ம் திகதிக்கு முன்னர் அமைச்சர்களாக பதவி வகித்தவர்களுக்கும் அமைச்சர்களிற்கான பாதுகாப்பை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.