சபாநாயகர் அடுத்த புதன்கிழமை வீட்டுக்கு செல்ல தயாராக வேண்டும் – தினேஷ்

241 0

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இம்மாதம் 14 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் போது தற்போதைய சபாநாயகர் கருஜயசூரிய வீட்டுக்குச் செல்ல வேண்டியிருக்கும் என புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சபை முதல்வர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

நாட்டின் ஜனநாயகம் பேணப்பட வேண்டியது பாராளுமன்றத்திலே தவிர ரணில் விக்ரமசிங்க நித்திரை கொள்ளும் அலரிமாளிகையில் அல்ல. நாட்டின் சபாநாயகரொருவர் தன் கட்சி சார்பாக செயற்படுவது கூட அரசியலமைப்பை மீறும் செயற்பாடு என்பதை கருஜயசூரிய புரிந்துகொள்ள வேண்டும் எனவும் சபை முதல்வர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்ற சுற்று வட்டாரத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மக்களின் தீர்விற்கமையவே தற்போதைய புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது.  அதனை மீறி செயற்படுவதற்குரிய அதிகாரம் யாருக்கும் கிடையாது.

பாராளுமன்ற அமர்வினை கூட்டுவதற்கும், ஒத்தி வைப்பதற்கும் இடைநிறுத்துவதற்குமான அதிகாரம் நாட்டின் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதியிடம் மாத்திரமே காணப்படுகின்றது.

ஜனாதிபதியால் வெளியிடப்படும் வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரமே சபாநாயகர் செயற்பட முடியுமே தவிர, அவருக்கு எந்த தன்னிச்சையான அதிகாரமும் கிடையாது. தன்னிடமில்லாத அதிகாரத்தை கொண்டு சபாநாயகர் செயற்பட முற்படுவாரானால் விரைவில் வீடு செல்ல வேண்டியநிலை வரும் என்றார்.

Leave a comment