இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வுநிலை நிலவுவதால் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று (செவ்வாய்க் கிழமை) கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் கடந்த 1-ந் தேதி தொடங்கி பெய்து வருகிறது. தற்போது அது வலுவடைந்து இருக்கிறது. இதனால் தென் தமிழகத்திலும், வட தமிழகத்திலும் அடுத்த 2 நாட்களுக்கு மழை இருக்கும்.
அதிலும் குறிப்பாக நாளையும் (புதன்கிழமை), நாளை மறுதினமும் (வியாழக் கிழமை) தென் தமிழகத்தில் கனமழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
இந்த நிலையில் இலங்கை அருகே நிலவும் காற்றழுத்த தாழ்வுநிலையால், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று (செவ்வாய்க் கிழமை) இடியுடன் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-
தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கை அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால், அடுத்து வரும் 24 மணி நேரத்தில் (இன்று) தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) அதே பகுதியில் மேலும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகி, மேற்கு மற்றும் வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து இலங்கை முதல் குமரிக்கடல் பகுதியில் 8-ந் தேதிக்குள் கடக்கக்கூடும்.
இதன் காரணமாக தென் தமிழகத்தில் சில இடங்களில் 7-ந் தேதி (நாளை), 8-ந் தேதி (நாளை மறுநாள்) மிக கனமழை இருக்கும். வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரையில் வானம் அவ்வப்போது மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடைவெளிவிட்டு மழை பெய்யும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், குன்னூரில் 4 செ.மீ., கோத்தகிரி, நத்தம், உத்தமபாளையத்தில் தலா 2 செ.மீ., கெட்டி, போளூர், சேத்தியாதோப்பு, ஊட்டி, திருபுவனம், மன்னார்குடி, செஞ்சி, செங்கத்தில் தலா ஒரு செ.மீ. மழை பெய்துள்ளது.