சிறிலங்கா அதிபர் சிறிசேனாவை தொடர்பு கொண்ட ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் அங்கு விரைவில் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்துமாறு வலியுறுத்தினார்.
சிறிலங்காவில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேயை கடந்த 26-ந் திகதி அதிரடியாக நீக்கிய அதிபர் சிறிசேனா புதிய பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபக்சேவை நியமித்தார். ஆனால் தனது பதவிநீக்கம் சட்டவிரோதமானது எனக்கூறிய ரணில் விக்ரமசிங்க தனது பெரும்பான்மையை நிரூபிக்க நாடாளுமன்றத்தை கூட்டுமாறு வலியுறுத்தினார்.
ஆனால் இதற்கு மறுத்த அதிபர் சிறிசேனா நாடாளுமன்றத்தையும் வருகிற 16-ந் திகதி வரை முடக்கி வைத்து உத்தரவிட்டார். இதற்கு சபாநாயகர் கரு ஜெயசூர்யா பலத்த எதிர்ப்பு தெரிவித்தார். அத்துடன் நாடு முழுவதும் போராட்டங்களும் வன்முறையும் வலுத்து வருகிறது. சிறிலங்காவின் இந்த திடீர் நெருக்கடி நிலைக்கு உலக நாடுகளும் கவலை வெளியிட்டன.
இதைத்தொடர்ந்து சபாநாயகர் கரு ஜெயசூர்யாவுடன் ஆலோசனை நடத்திய அதிபர் சிறிசேனாஇ நாடாளுமன்ற முடக்கத்தை திரும்ப பெற்றார். எனவே நாடாளுமன்றம் 5-ந் திகதி (நாளை) கூடும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதை ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் மறுத்தனர்.
இதனால் நாடாளுமன்றம் கூடுவதில் சந்தேகம் இருந்து வந்த நிலையில் சபாநாயகர் நேற்று முன்தினம் அதிபர் சிறிசேனாவை தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் அவர் நாடாளுமன்றத்தை 7-ந் திதி (புதன்கிழமை) கூட்டுவதற்கு அதிபர் ஒப்புக்கொண்டதாக அறிவித்தார். இதன் மூலம் நாடாளுமன்றம் கூடுவது உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் அதிபர் சிறிசேனாவை ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது சிறிலங்காவில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களுக்கு கவலை தெரிவித்த குட்டரெஸ் அங்கு அனைத்துக்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை சீராக்குவதற்கு உதவ முன்வந்தார்.
மேலும் சிறிலங்காவில் அமைதி பாதுகாப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய குட்டரெஸ் அங்கு நாடாளுமன்றத்தை கூட்டி விரைவில் வாக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்குமாறும் சிறிசேனாவை வலியுறுத்தினார்.
இதைப்போல சிறிலங்காவுக்கான ஐ.நா. பிரதிநிதியான ஹனா சிங்கரும் அதிபர் சிறிசேனா சபாநாயகர் கரு ஜெயசூர்யா உள்ளிட்ட தலைவர்களை நேரில் சந்தித்து ஆன்டனியோ குட்டரெசின் செய்தியை அளித்தார்.
இதற்கிடையே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க தனக்கு போதுமான உறுப்பினர்களின் ஆதரவு தற்போது இருப்பதாக ராஜபக்சே கூறியுள்ளார். ரணில் விக்ரமசிங்க கட்சியை சேர்ந்த குறைந்தது 5 உறுப்பினர்களாவது தன்னுடைய அணிக்கு மாறி இருப்பதாகவும் அவர் கூறினார். இதைப்போல தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகி தனியாக செயல்பட்டு வரும் வன்னி மாவட்ட எம்.பி. சிவசக்தி ஆனந்தனும் ராஜபக்சேவுக்கு ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளார். இதன் மூலம் தனக்கு மந்திரி பதவி கிடைக்கும் எனவும் அதனால் தொகுதி மக்களுக்கு மிகப்பெரிய சேவை செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த யாழ்ப்பாண மாவட்ட எம்.பி.க்கள் 2 பேர் மற்றும் முல்லைத்தீவு மன்னாரை சேர்ந்த தலா ஒரு எம்.பி. என மேலும் 4 பேரும் ராஜபக்சவை ஆதரிப்பார்கள் எனவும் அவர் கூறியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முன்னதாக தமிழ் எம்.பி. ஒருவர் நேற்று முன்தினம் ராஜபக்சே அணிக்கு தாவி அமைச்சராக பதவியேற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
225 உறுப்பினர் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை பெற 113 உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும். சிறிலங்காவில் அரசியல் நெருக்கடி ஏற்படுவதற்கு முன் ரணில் விக்ரமசிங்கவின் கட்சிக்கு 106 உறுப்பினர்களும் ராஜபக்ச சிறிசேனா கூட்டாணிக்கு 95 எம்.பி.க்களும் இருந்தது குறிப்பிடத்தக்கது.