நவம்பர் 6-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி, 8-ம் தேதி வரை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் மற்றும் தென் மாநிலங்களில் கடந்த 1-ம் தேதி வடகிழக்கு பருவ மழை தொடங்கியது. தென் மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்கிறது.
சென்னையில் 3 நாட்கள் தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்தது. நேற்று சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் மழை அவ்வபோது பெய்தது. வெயிலும், மழையும் மாறி மாறி நீடித்தது. தற்போது அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்தம் நிலவுகிறது.
இந்தநிலையில் தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வருகிற 6-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:-
கடந்த 24 மணிநேரத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகம் மற்றும் புதுவையில் தீவிரமாக பெய்து வருகிறது. அதிகபட்சமாக பாப நாசத்தில் 15 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மணிமுத்தாறில் 6 செ.மீ மழை பெய்துள்ளது.
தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் 6-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும். இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் இலங்கை மற்றும் குமரி கடல் பகுதி வழியாக நகர்ந்து செல்லும்.
இதன்காரணமாக வருகிற 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை பருவமழை மேலும் வலுப்பெறும். கடலோர மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் 6-ம் தேதி முதல் 7-ம் தேதி வரையும், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் 7-ம் தேதி முதல் 8-ம் தேதி வரையும் கடல்காற்று மணிக்கு 50 கி.மீட்டர் வேகம் வரை வீசக்கூடும்.
எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். ஆழ் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றவர்கள் 6-ம் தேதிக்குள் கரை திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் பல இடங்களில் பரவலாக மழை பெய்யும்.’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும், நவம்பர் 6-ம் தேதி தீபாவளி பண்டிகை என்பதால், கனமழை இருக்குமா? என்ற கேள்விக்கு பதிலளித்த பாலச்சந்திரன், தென்தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.