சர்வதேச எல்லையில் இந்திய படைகள் நடத்திய துப்பாக்கிச்சூடு குறித்து இந்திய தூதரை அழைத்து பாகிஸ்தான் தனது கண்டனத்தை பதிவு செய்தது.
காஷ்மீரில் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் படையினர் அடிக்கடி தாக்குதல் நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதற்கு இந்திய வீரர்களும் சரியான பதிலடி கொடுத்து வருகின்றனர். அந்தவகையில் நேற்று முன்தினம் அங்கு இந்திய படைகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாகிஸ்தானின் பிம்பர் பகுதியை சேர்ந்த முனாசா பிபி (வயது 22) என்ற இளம்பெண் உயிரிழந்ததாக பாகிஸ்தான் கூறியுள்ளது.
இந்த சம்பவத்துக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்து உள்ளது. அதுமட்டுமின்றி இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய துணை தூதர் ஜே.பி.சிங்குக்கு சம்மன் அனுப்பி நேரில் அழைத்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முகமது பைசல், அவரிடம் நேரிலும் கண்டனத்தை பதிவு செய்தார்.
பாகிஸ்தான் எல்லையில் மக்களின் குடியிருப்பு பகுதிகளில் இந்திய வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்துவதாகவும், இது சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்டங்களுக்கு எதிரானது எனவும் பைசல் கூறினார். இந்தியாவின் அத்துமீறிய தாக்குதல்கள் பிராந்தியத்தின் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைவதாகவும் அவர் தெரிவித்தார்.