20 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றிபெறும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் அ.தி.மு.க. நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்:-
இடைத்தேர்தலில் அ.ம.மு.க. வெற்றி பெறும் என தங்கதமிழ்செல்வன் தெரிவித்து வருகிறார். அவரவர் கட்சிகள் வெற்றி பெறும் என்று எல்லோரும் நினைப்பார்கள். ஆனால் 20 தொகுதிகளில் அ.தி.மு.க.வே வெற்றி பெறும். இரட்டை இலை ஜெயிக்கும்.
8 தொகுதி வெற்றி பெற்றால் போதும் என பத்திரிக்கையில் வெளியானது. எங்கள் இலக்கு 20 தொகுதி என முதல்வர், துணை முதல்வர் கூறியுள்ளனர். இடைத் தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. தயாராக உள்ளது.
தினகரன்-மு.க.ஸ்டாலின் சந்திப்பு குறித்து எனக்கு தெரியாது. நான் பார்க்க வில்லை. தினகரன் வந்தால் இணைத்து கொள்வீர்களா? என்று கேட்கிறீர்கள். நாங்கள் அ.தி.மு.க. வில் உள்ளவர்களை அழைத்துள்ளோம் என்பதை தெளிவாக சொல்லி விட்டோம்.
பா.ஜனதாவுக்கு அ.தி.மு.க. துணை போகிறதா? என்று பலரும் கேட்கின்றனர். நாட்டை ஆளுவது பா.ஜனதா தான். பிரதமர் நரேந்திர மோடி தான்.நிதி வேண்டும் என்றால் அமெரிக்க அதிபரையா பார்க்க முடியும்? மாநிலத்துக்கு எது தேவை என்றாலும் மோடியிடம் தான் கேட்க வேண்டும். எத்தனை கட்சிகள் வந்தாலும் களத்தில் இருப்பது. அ.தி.மு.க- தி.மு.க. தான். மற்ற கட்சிகள் காணாமல் போய்விடும். மற்றவைலெல்லாம் கட்சியாக இருக்கும் களத்தில் இருக்காது.
கமல்ஹாசன் 20 தொகுதிகளிலும் களம் இறங்குவாரா? என்பது தெரியாது. அவர் பாவம் அவரை விட்டுவிடுங்கள். ரஜினி ஆடியோ வெளியீட்டு விழாவில் லேட்டா வந்தாலும் கரெக்டா அடிச்சுருவோம் என தெரிவித்துள்ளார். நாங்களும் அதையே சொல்கிறோம். கரெக்டா அடிச்சுருவோம்.இவ்வாறு அவர் கூறினார்.