பாகிஸ்தானில் வடமேற்கு பகுதியில் விமானப்படைக்கு சொந்தமான எப்-7 போர் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானி பலியானார்.
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் அந்த நாட்டின் விமானப்படைக்கு சொந்தமான எப்-7 ரக போர் விமானம் நேற்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டு இருந்தது. ஜாம்ருட் நகர் அருகே கைபர் கணவாய் நுழைவுவாயில் அருகே சென்றபோது திடீரென விமானம் விழுந்து நொறுங்கியது.
இதில் அமர் ஷாஜத் என்ற விமானி உயிரிழந்தார். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்துமாறு ராணுவம் உத்தரவிட்டு உள்ளது. கடந்த 1½ ஆண்டுகளில் பாகிஸ்தானில் பல விமான விபத்துக்கள் நடந்துள்ளன. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த விமான விபத்தில் பெண் விமானி ஒருவரும், 2015-ம் ஆண்டு நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் நார்வே, பிலிப்பைன்ஸ் நாடுகளின் தூதுவர்கள் உள்பட 7 பேர் பலியானதும் குறிப்பிடத்தக்கது.