திட்டமிட்ட திடீர் அரசியல் திருப்பம்!

312 0

இலங்கை அரசியலில் ஒக்டோபர் 26 ஆம் திகதி ஒரு முக்கியமான வரலாற்று தினமாகப் பதிவாகியிருக்கின்றது. வரலாற்று தினம் என்பதிலும் பார்க்க ஜனநாயகத்தைக் கேள்விக்கு உள்ளாக்கிய ஒரு கரிநாளாகவும் அது கருதப்படலாம்.

அன்றைய தினம்தான், எவருமே எதிர்பார்த்திராத வகையில் திடீரென, அதிர்ச்சியளிக்கும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாட்டின் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டார். அந்த சம்பவத்துடன் சூட்டோடு சூடாக ரணில் விக்கிரமசிங்கவை, அந்தப் பதவியில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உடனடியாக பதவி நீக்கம் செய்துள்ளார் என்ற அறிவித்தலும் வெளியாகியது.

வடக்கில் வடமாகாணசபையின் முதலமைச்சராக இருந்த விக்னேஸ்வரன் புதிய கட்சியொன்றை ஆரம்பித்த வைபவம் தமிழ் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதேநேரம் தலைநகரின் காலிமுகத்திடலில் இளைஞர்கள் அலையெனத் திரண்டு பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பளக் கோரிக்கையை வலியுறுத்தி அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நடத்திய போராட்டம் தெற்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சம்பவங்கள் இடம்பெற்ற இரு தினங்களின் பின்னர், அதிரடியாக மகிந்த ராஜபக்ச பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படுகின்றார். ரணில் விக்கிரமசிங்க அடாவடியாக பிரதமர் பதவியில் இருந்து தூக்கி எறியப்படுகின்றார்.

இந்த அரசியல் மாற்றம் உள்ளுரில் மட்டுமல்லாமல் சர்வதேசத்திலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. என்ன நடந்தது, ஏன் இப்படி என்ற கேள்விகளுக்கு பலரும் விடை தெரியாமல் தடுமாறி நிற்கும் அளவில் வெள்ளிக்கிழமை இரவு இந்த அரசியல் மாற்றம் மின்னல் வேகத்தில் நிகழ்ந்திருந்தது.

மூன்று அறிவித்தல்களும் ஒரு பதில் அறிக்கையும் அந்த முன்னிரவு நேர அரசியல் மாற்றத்தின்போது வெளியாகியிருந்தன. நல்லாட்சி அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளில் ஒன்றாகிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேசிய அரசாங்கத்தில் இருந்து தன்னிச்சையாக விலகிக்கொள்வதாகத் தெரிவித்த முதலாவது அறிக்கை அதன் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீரவினால் வெளியிடப்பட்டது.

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து ஜனநாயகத்தையும் நாட்டு மக்களின் அரசியல் உரிமைகளையும் பாதுகாப்பதற்காகத் தேசிய அரசாங்கத்தை அமைத்திருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏன் அரசாங்கத்தில் இருந்து விலகிக் கொள்கின்றது என்பதற்கான விளக்கம் எதுவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை. திடீரென வெளியிடப்பட்ட இந்த அறிக்கை மக்கள் மத்தியிலும் அரசியல் வட்டாரங்களிலும் ஒருவிதமான குழப்பத்தையே ஏற்படுத்தியிருந்தது.

இந்த அறிக்கை வெளியாகிய சிறிது நேரத்தில் அதிரடியாக அடுத்த அறிக்கையொன்று ஜனாதிபதி செயலகத்தில் இருந்து வெளியாகியது. முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மகிந்த ராஜபக்சவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதிரடியாக வெளியாகிய இந்த இரண்டாவது அறிக்கையையடுத்து, ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து உடனடியாக நீக்குவதாகத் தெரிவிக்கும் அறிவித்தலைக் கொண்ட ஜனாதிபதியினால் எழுதப்பட்ட கடிதம் வெளியிடப்பட்டது.

அடுத்தடுத்து அடிமேல் அடி அடித்தது போன்ற வெளியாகிய இந்த அறிவித்தல்கள் நாட்டில் என்ன நடக்கின்றது என்பதைத் தெரிந்து கொள்ள முடியாமல் இருந்த மக்கள் மத்தியில், இருளில் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போன்ற உணர்வையே ஏற்படுத்தியிருந்தது.

ஏன் இந்த மாற்றம், ஏன் இவ்வாறு நல்லாட்சி கவிழ்க்கப்பட்டது என்ற கேள்விக்கு தெளிவான திருப்தியளிக்கத்தக்க வகையிலான விளக்கங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை. இதனால், ஊழல்கள், குடும்ப ஆதிக்க அரசியல் போக்கு போன்ற காரணங்களினால் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது, மக்களினால் தூக்கி எறிந்து நிராகரிக்கப்பட்டிருந்த, ஈடிணையற்ற அதிகாரப் பலமுள்ளவராகத் திகழ்ந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏன் பிரதமராகப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் என்பது தெரியாமல் மக்கள் குழப்பமடைய நேரிட்டிருந்தது.

பொது வெளியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த இந்த அரசியல் மாற்றம் ரணில் விக்கிரமசிங்கவுக்கு உடனடியாக எத்தகைய உணர்வுகளை ஏற்படுத்தியிருந்தது என்பது தெரியவில்லை. ஆயினும் பிரதமர் பதவியில் இருந்து தன்னைத் தூக்குவது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது, தானே இன்னும் நாட்டின் பிரதமராக இருக்கின்றேன் என ஜனாதிபதிக்கு அவர் உடனடியாகவே பதில் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருந்தார்.

அதேவேளை நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் தன்னால் தனக்கு உள்ள பெரும்பான்மைப் பலத்தைக் காட்ட முடியும் என்றும் அவர் ஊடகங்ளின் ஊடாகக் கூறியிருக்கின்றார்.

தனித்து ஆட்சி அமைப்பதற்கான உந்துதல்

ஐக்கிய தேசிய கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் இணைந்து 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் பின்னர் அமைக்கப்பட்ட அரசாங்கம் தேசிய அரசாங்கம் என்றும் நல்லாட்சி அரசாங்கம் என்றும் அழைக்கப்பட்டது.
இரண்டு கட்சிகளையும் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கூட்டு அரசாங்கத்தின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தார்கள். இரண்டு கட்சிகள் சேர்ந்து அமைத்த இந்த கூட்டு அரசாங்கத்தின் அமைச்சரவையில் 40 அமைச்சர்களும் பிரதமர் மற்றும் ஜனாதிபதி உட்பட மொத்தமாக 42 பேர் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் மாத்திரமே அமைச்சரவை அந்தஸ்து பெற்றிருந்தனர்.

இவர்களைவிட, 24 ராஜாங்க அமைச்சர்களும் 21 பிரதி அமைச்சர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் அமைச்சரவை அந்தஸ்து பெற்றிருக்கவில்லை.

இந்த கூட்டு அரசாங்கத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவராகிய மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும் பதவி வழியாக நாட்டின் அரச தலைவர்களாகச் செயற்பட்டு வந்தனர். கடைசியாக 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின் பின்னர், இரண்டு கட்சிகளும் 2 வருடகால ஒப்பந்தத்தின் அடிப்படையில் தேசிய அரசாங்கத்தை அமைத்து ஆட்சி நிர்வாகத்தை நடத்தி வந்தன.

முன்னைய ஆட்சியில் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டிருந்தாகக் குற்றம் சாட்டிய இந்த அரசாங்கத்தின் உயர் தலைவர்களும் முக்கியஸ்தர்களும் தங்களால் அமைக்கப்பட்ட தேசிய அரசாங்கம் ஜனநாயகத்திற்குப் புத்துயிரளித்து, மக்களுடைய அரசியல் உரிமைகளைப் பாதுகாத்துச் செயற்படும் என்று உறுதியளித்திருந்தனர். ஆனால், 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் அவருடைய அணியினரும்இ பல்வேறு இனவாத அரசியல் செயற்பாடுகளின் மூலம் சிங்கள மக்கள் மத்தியில் தமது ஆதரவைக் கட்டியெழுப்பி மீண்டும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான முயற்சிகளில் அயராமல் ஈடுபட்டிருந்தார்கள்.

அவர்களுடைய இந்த முயற்சிகளுக்கு 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் ஒரு பரீட்சார்த்த களமாக வந்து வாய்த்தது. அந்தத் தேர்தலில் ஆளும் கட்சிகளான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியன படுதோல்வியைச் சந்தித்தன. இந்தத் தேர்தல் தோல்வி, தேசிய அரசாங்கத்திற்கு மிக மோசமான பின்னடைவை ஏற்படுத்தியிருந்தது.

அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து, மூன்று வருடங்களுக்கு முன்னர் தூக்கி எறியப்பட்ட மகிந்த அணியினரையே மக்கள் ஆதரிக்கின்றார்கள், அவர்கள் பின்னால் அணிதிரண்டிருக்கின்றார்கள் என்ற கசப்பான உண்மையை இந்தத் தேர்தல் வெளிப்படுத்தியிருந்தது. மக்களுடைய இந்தத் தேர்தல் தீர்ப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருந்தது.

அரசாங்கத்திற்கு ஏற்பட்ட இந்தப் பின்னடைவுக்கு, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் இருந்த ஐக்கிய தேசிய கட்சியின் பொருளாதாரக் கொள்கையும் ஏனைய செயற்பாடுகளுமே முக்கிய காரணம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம் சாட்டியிருந்தார். அதனை ஐக்கிய தேசிய கட்சி மறுத்திருந்தது. இந்தத் தேர்தல் தோல்வியே இணைந்து கூட்டாட்சி அமைத்திருந்த இரண்டு தலைவர்களிடையேயும் முரண்பாடுகளைத் தோற்றுவிப்பதற்கும் காரணமாக அமைந்தது.

தொடர்ந்து பல்வேறு விடயங்களில் இருவருக்கும் இடையில் முரண்பாடுகள் வளர்ந்தனவே தவிர, அரசாங்கத்தைச் சீராகக் கொண்டு நடத்தவதற்கு அவசியமான இணக்கமான அரசியல் உறவு நிலை உருவாகவில்லை. உள்ளுராட்சித் தேர்தலின்போது முற்றுப் பெற்றிருந்த இரண்டு வருடகால ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பதற்கோ அல்லது அதற்கு நிகரான வேறு ஏற்பாடுகளைச் செய்யவோ இரு தரப்பினரும் முனையவில்லை. உள்ளுராட்சித் தேர்தல் தோல்வியையடுத்து கூட்டு அரசாங்கத்தின் உறுதிப்பாடு கேள்விக்குறிக்கு உள்ளாகியிருந்தது.,

குறிப்பாக அமைச்சரவை எந்த வகையில் அதிகாரம் பெற்றிருக்கின்றது என்ற விமர்சனத்துடன் கூடிய கேள்வி எழுந்து பல்வேறு வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருந்தது. இது இரண்டு கட்சித் தலைவர்களையுமே தனித்து ஆட்சி அமைப்பதற்கான உந்துதலை ஏற்படுத்தியிருந்தது. அப்போது எந்த நேரத்திலும் அரசாங்கம் கலையலாம் அல்லது கலைக்கப்படலாம் என்ற அளவுக்கு நிலைமைகள் மோசமடைந்திருந்தன. அன்று முதல் அரசாங்கம் உறுதிப்பாடற்ற நிலையில் இழுபட்டுக் கொண்டிருந்தது.

தனித்து ஆட்சி அமைப்பதற்கான முனைப்பு

அரசாங்கத்தின் உறுதிப்பாடற்ற நிலையில் ஆட்சி தொடர்ந்து இடம்பெற்ற போதிலும், ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான அரசியல் செயற்பாடுகளில் நிலவிய முரண்பாடான நிலைமை களையப்படவில்லை. பல்வேறு விடயங்களிலும் தொடர்ந்த முரண்பாட்டுப் போக்கு, இறுதியாக இரண்டு விடயங்களில் ஆழமாக வேரூன்றி வெடித்துச் சிதறியது.

ஜனாதிபதி மைத்திpரபால சிறிசேனவையும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகிய கோட்டாபய ராஜபக்சவையும் கொலை செய்வதற்காகத் திட்டம் தீட்டப்பட்டது என வெளியாகிய விடயமும், சீனாவுககுத் தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகரின் கிழக்கு முனையத்தில் இந்தியாவுக்கு இடமளிக்கப்பட வேண்டும் என்பதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் ஏற்பட்டிருந்த வெளிப்படையான நேர்முரணான நிலைப்பாடும் இருவரையும் முட்டி மோதிக்கொள்ளச் செய்திருந்தன.

நாட்டின் உயர் தலைவராகிய ஜனாதிபதி மீதான கொலை முயற்சி தொடர்பான விடயத்தில் சட்டம் ஒழுங்கிற்குப் பொறுப்பான பிரதமர் பொறுப்போடு செயற்படவில்லை. முறையான விசாரணைகளை நடத்தி அதனைச் சரியாகக் கையாளவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிப்படையாகவே பிரதமர் மீது குற்றம் சுமத்தினார். அத்துடன் இந்த விடயத்தில் இந்திய உளவுத்துறை நிறுவனமாகிய றோ சம்பந்தப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி அமைச்சரவையில் தெரிவித்ததாக வெளிவந்த தகவல் இந்திய அரசாங்கத்துடன் முரண்படச் செய்திருந்தது. இதற்கும் பிரதமரின் விசாரணை நடவடிக்கைகளே காரணம் என்றும் கருதப்பட்டது.

கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தில் இந்தியாவுக்கு இடமளிக்க வேண்டும் என்ற பிரதமரின் நிலைப்பாட்டை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை. அனைத்தையும் அந்நிய நாடுகளுக்குத் தாரைவார்த்துக் கொடுக்கப் போகின்றீர்களா என்று பிரதமரிடம் அவர் நேரடியாக வெடுக்கென கேள்வி கேட்கும் அளவுக்கு அந்த விடயம் தீவிரமாகியிருந்தது. இருவரும் தங்களுடைய நிலைப்பாட்டில் இருந்து இம்மியும் நகரத் தயாராக இருக்கவில்லை. கொழும்புத் துறைமுகத்தில் இந்தியாவுக்கு இடமளிக்கத் தாயராக இல்லாத நிலையும், ஏனைய இந்திய உதவியுடனான அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் அரசு காட்டிய தாமதமான போக்கு உள்ளிட்ட விடயமும், இந்தியாவுடனான கசப்புணர்வை அதிகரிப்பதற்குக் காரணமாகியிருந்ததன. இது குறித்து இநதியாவுக்கு தனித்தனியே விஜயம் செய்தபோது ஜனாதிபதியும் பிரதமரும் விளக்கமளிக்க வேண்டிய கட்டாய நிலையும் உருவாகியிருந்தது.

இத்தகைய இருதரப்பு கசப்புணர்வுக்கு மத்தியிலேயே தனித்து ஆட்சி அமைக்க வேண்டும் என்ற முனைப்பு மேலோட்டமான அரசியல் செயற்பாடுகள் நடவடிக்கைகளுக்குப் பின்னால் அடிப்படையில் இரு தலைவர்களிடமும் முனைப்பு பெற்றிருந்தது. தனித்து ஆட்சி அமைத்துவிட வேண்டும் என்ற முனைப்பும் அரசியல் வேட்கையும் வெளியாருக்குத் தெரியாத வகையில் இரு தலைவர்களின் மனங்களிலும் கனன்று கொண்டிருந்தன.

தனித்து ஆட்சி அமைப்பதற்கு காலம் கனிய வேண்டும் என்ற நிலையில் உரிய சந்தர்ப்பத்திற்காக இரு தலைவர்களும் இரகசியமாகக் காத்திருந்த ஒரு சூழலே நிலவியது. இதன் அடிப்படையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கை இல்லாப் பிரேரணை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பினரால் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. ஆனால் துரதிஸ்டவசமாக அது தோல்வியடைந்தது.

இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி மீது நம்பிக்கை இல்லாப் பிரேரணை கொண்டு வரவேண்டும் என்பது ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடாக இருந்தது. அதற்காக அந்தக் கட்சிக்குள் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் பற்றிய தகவல்களும் ஏற்கனவே வெளியாகியிருந்தன. அதேபோன்று தேசிய அரசாங்கத்தைக் கலைத்து தனியே ஆட்சி அமைக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் வலியுத்தியிருந்தமை பற்றிய செய்திகளும் ஊடகங்களில் வெளிவந்திருந்தன. இந்த பின்னணியிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசிய அரசாங்கத்தைக் குலைத்து மகிந்த ராஜபக்சவை பிரதமராக பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

தந்திரோபாய நகர்வு

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியின் உச்சகட்ட அனுகூலங்களை அனுபவித்த நிலையில் தேர்தல் தோல்வியின் மூலம் ஓரங்கட்டப்பட்டு, மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றிவிட வேண்டும் என்ற அரசியல் துடிப்போடு செயற்பட்டுக் கொண்டிருந்த மகிந்த ராஜபக்சவுடன் அணி சேர்ந்து தனியாட்சி அமைப்பதற்கான முயற்சிகளில் ஜனாதிபதி மிகவும் இரகசியமாகச் செயற்பட்டிருந்தார்.

தன்னுடைய திட்டத்தை வெகு கச்சிதமாக மிகவும் இரகசியமான முறையில் நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ததன் பின்னரே, தேசிய அரசாங்கத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தன்னிச்சையாக வெளியேறுவதற்கான முடிவை எடுத்து, அது தொடர்பான அறிக்கையை கட்சியின் பொதுச்செயலாளரின் ஊடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டிருந்தார்.

இரண்டு கட்சிகள் இணைந்து அமைத்துள்ள அரசாங்கத்தில் இருந்து ஒரு கட்சி விலகும்போது, அமைச்சரவை செயலிழக்கும். அந்த அரசாங்கம் தானாகவே கலைந்துவிடும். அவ்வாறு கலையும்போது ஜனாதிபதிக்கு அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி புதிய பிரதமர் ஒருவரை நியமிக்க முடியும். இத்தகைய ஒரு நகர்வையே ஒக்டோபர் 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முன்னிரவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிகவும் நேர்த்தியாக மேற்கொண்டிருந்தார்.

இரு கட்சிகள் சேர்ந்து அமைத்திருந்த கூட்டு அரசாங்கத்தில் இருந்து தன்னிச்சையாகத் தனது கட்சியை விலக்கிக்கொள்வதன் மூலம் ஆட்சி உறுதியற்ற நிலைக்கு ஆளாகின்றது. அ;த்தகைய நிலைமையைத் தொடரவிட முடியாது. அத்தகைய ஒரு சூழலில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி புதிய அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் என்ற அந்த கடமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கச்சிதமாக நிறைவேற்றபட்டுள்ளது.

கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் மகிந்த அமரவீர அறிக்கை வெளியிடுகின்றார். அந்த அறிக்கையின் ஈர மை உலர்வதற்கு முன்பே ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை புதிய பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்து அதனைப பகிரங்கப்படுத்தினார். தொடர்ந்து பதவியில் இருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாகப் பதவி நீக்கம் செய்வதாகத் தெரிவிக்கும் கடிதத்தையும் ஜனாதிபதி முறையாக அனுப்பி வைக்கின்றார். இந்த வகையிலேயே அரசியலில் மாற்றம் நிகழ்த்தப்பட்டுள்ளது. அரசியல் மாற்றத்திற்கான இந்த நகர்வு அவரையும் புதிய பிரதமராகிய மகிந்த ராஜபக்சவையும் தவிர்ந்த ஏனைய வெளியாருக்குத் தெரிந்திருக்கவில்லை.

மிகவும் இரகசியமாகவும் தந்திரோபாயமாகவும் மேற்கொள்ளப்பட்ட இந்த நகர்வு சட்டரீதியானது. அரசியலமைப்புக்கு உட்பட்டது. இது தொடர்பாக பல்வேறு விவாதங்கள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், இது சட்ட வலு மிக்கது. இது குறித்து எழுந்துள்ள சந்தேகங்கள், விவாதங்களுக்கு நீதிமன்றத்தின் பொருள்கோடல் விளக்கத்தின் மூலம் முடிவு காணலாம். அத்தகைய முடிவு காணப்படும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது.

இரண்டாவது முறையாக இடம்பெற்ற பிரதமர் நியமனம்

பதவியில் உள்ளவருக்குப் பதிலாக மகிந்த ராஜபக்சவை புதிய பிரதமராக நியமனம் செய்த நடவடிக்கை ஒன்றும் புதியதல்ல. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இதற்கு முன்னரும் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

இரண்டாவது தடவையாக இது இப்போது நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற உடன், அப்போது டி.எம்.ஜயரட்ன பிரதமராகப் பதவியில் இருந்த நிலையில் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத் தக்கது. மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கிய இன்றைய சூழலுக்கும் அன்றைய சூழலுக்கும் இடையில் வித்தியாசங்கள் இருக்கின்றன.

நாட்டின் உயர் தலைவராக அரசாங்கத்தின் முதன்மைப் பதவியாகிய ஜனாதிபதி பதவியில் இருந்த மகிந்த ராஜபக்ச தேர்தலில் தோல்வியடைந்ததும், அன்றைய அரசாங்கம் ஆட்டம் கண்டிருந்தது. அந்த நிலையில் தேசிய பாதுகாப்புக்காகவும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டைப் பேணுவதற்காகவும் அன்றைய புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமித்தார். அன்றைய அரசாங்கம் தனிக்கட்சி அரசாங்கமாக இருந்தது. அதனால்இ பிரதமராக நியமிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவிடம் பெரும்பான்மை பலம் உள்ளதா என்ற கேள்விக்கு இடமில்லாமல் போனது. அது குறித்து அப்போது எவரும் அக்கறை கொள்ளவுமில்லை. வாதங்கள் செய்யவுமில்லை. அதற்கு அன்றைய அரசியல் சூழலும் முக்கிய காரணம் எனலாம்.

ஆனால் அன்றைய அரசியில் நிலைமையில் இருந்து இப்போதைய அரசியல் சூழல் வேறுபட்டது. அன்று ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களைக் குறைப்பதற்கான 19 ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கவில்லை. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை முழுமையாக இருந்தது. ஆனால், இன்று நடைமுறையில் உள்ள 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் விவாதத்தையும் கேள்விகளையும் எழுப்புவதற்குக் காரணமாகியுள்ளது. இருப்பினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சட்டத்திற்கு அமைவாக தந்திரோபாய ரீதியில் திட்டமிட்ட வகையில் மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்துள்ளார். ஆயினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நாடாளுமன்றத்தில் அவருக்குள்ள பெரும்பான்மை பலத்தை நிரூபிக்குமாறு கோரி அதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியிருக்க வேண்டும். இதுவே ஜனநாயகம். இந்த நடைமுறை இடம்பெறவில்லை. இது ஜனநாயகத்திற்கு மட்டுமல்ல. சட்டத்திற்கு முரணானதாகவும் நோக்கப்படலாம்.

ஏனெனில் அரசியலில் அதிரடியாக மாற்றம் ஏற்படுத்தப்பட்ட அன்றைய தினம் காலையில் நாடாளுமன்றம் கூடியிருந்தது. சபை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. ஆனால், நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்படுகின்றது என்று அப்போது சபையில் அறிவிக்கப்படவில்லை. மாறாக வெள்ளிக்கிழமை முன்னிரவில் மாற்றம் நிகழ்கின்றது. வார இறுதிக்காக நாடாளுமன்றம் விடுமுறையில் இருக்கின்றது. அந்த சந்தர்ப்பத்திலேயே, நாடாளுமன்றம் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்படுகின்றது என்ற அறிவித்தலை ஜனாதிவதி வெளியிடுகின்றார்.

பதவி நீக்கம் செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் தனக்கு உள்ள பெரும்பான்மை பலத்தை நிமூபிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படக் கூடாது என்று திட்டமிட்ட வகையில் நாடாளுமன்ற அமர்வுகள் முடிவுக்கு வந்துள்ளன என்றும் அடுத்த மாதம் 16 ஆம் திகதியே நாடாளுமன்றம் கூடும் என்றும் ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

ஐக்கிய தேசிய கட்சியை ஓரங்கட்டி பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவை வெளியேற்ற வேண்டும் என்ற அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையின் அம்சமாகவே இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டது என்று கருதுவதில் தவறிருக்க முடியாது.

அதேவேளை, புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தேவையான பலத்தைப் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொடுத்துள்ள திட்டமிட்ட நடவடிக்கையாகவும் இதனை நோக்க முடியும். மொத்தத்தில் இதனை, நல்லாட்சி புரிவதாகக் கூறி, நாட்டு மக்களின் வாக்குகளைப் பெ;று, ஆட்சி அதிகாரத்திற்கு வந்த நிறைவேற்று அதிகார பொறுப்பைக் கொண்ட ஒரு ஜனாதிபதியின் நியாயமான நடவடிக்கையாகவும் கருத முடியாது. இந்த நிலைமை துரதிஸ்டவசமானது.

பி.மாணிக்கவாசகம்

Leave a comment