தமிழகத்தில் தீபாவளி நாளில் காலையில் ஒரு மணி நேரம், இரவில் ஒரு மணி பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தை தமிழக அரசு இறுதி செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பட்டாசு தயாரிப்பு, விற்பனை மற்றும் வெடிப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த 23ம் தேதி தீர்ப்பு வழங்கியது. தீபாவளி மற்றும் பிற விழாக்களில் நாடு முழுவதும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும். கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது இரவு 11.55 மணி முதல் 12.30 மணி வரை 35 நிமிடங்களுக்கு மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.
இந்த தீர்ப்பு தீபாவளி கொண்டாடும் இந்துக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தீர்ப்பை எதிர்த்து பட்டாசு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் ஒதுக்கக்கோரி தமிழக அரசும் மனுதாக்கல் செய்தது. ஆனால், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்க முடியும் என்றும், அந்த 2 மணி நேரம் எது என்பதை மாநில அரசே முடிவு செய்யலாம் என்றும் கூறியது.
அதன்படி மாநில அரசு ஆலோசனை நடத்தி பட்டாசு வெடிக்கும் நேரத்தை இன்று அறிவித்துள்ளது. அதாவது, காலையில் 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவில் 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என கூறியுள்ளது.
மேலும் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பதற்கான பல்வேறு அறிவுறுத்தல்களையும், எந்தெந்த இடங்களில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகளையும் அரசு விதித்துள்ளது.