ஜெயலலிதா பூரண நலம்பெற கவிஞர் வைரமுத்து வாழ்த்து

333 0

201609251137045056_kavignar-vairamuthu-wish-to-jayalalitha-speed-recovery_secvpfதமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம்பெற கவிஞர் வைரமுத்து வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் பூரண நலம்பெற வேண்டி பல்வேறு அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில், கவிஞர் வைரமுத்துவும், ஜெயலலிதா பூரண நலம்பெற வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.

அதில், தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் முழுநலம் காண முழு மனதோடு வாழ்த்துகிறேன். அனைத்துக் கட்சி தலைவர்களும் வெவ்வேறு சொற்களில் ஆனால் ஒரே குரலில் அவரை வாழ்த்தியிருப்பது அரசியல் நாகரிகத்தின் அடையாளமாகும். இந்த பொதுவெளிப் பண்பாடு போற்றுதலுக்குரியது மற்றும் தொடரவேண்டியது என்று பொதுமக்கள் கருதுகிறார்கள்.

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் வாழ்த்தும் ஆழ்ந்த கவனம் பெறுகிறது. அவருக்கு நன்றி. தம் சுட்டுரையில் தமிழக முதல்வர் உடல் நலம்பெற வாழ்த்தியிருக்கும் கர்நாடக முதல்வர் அந்த உடல்நலக் குறைவுக்கான காரணத்தையும் அறிந்திருப்பார் என்பதில் ஐயமில்லை. நீர்ச்சத்துக் குறைவுதான் தமிழ்நாட்டு முதலமைச்சரின் உடல்நலக் குறைவுக்கு முதற்காரணமென்று மருத்துவ அறிக்கை சொல்கிறது.

ஓர் உடம்பில் நீர்ச்சத்து குறைந்தாலே நடல்நலம் சீர்கெடும் என்றால், மாநிலத்தின் நீர்ச்சத்து குறைந்தால் தமிழ்நாட்டின் நலம் எவ்வளவு கெடும் என்பதை கர்நாடக முதலமைச்சர் அறியாதவர் அல்லர். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை உதறி எறிவதோ, காவிரி மேலாண்மை வாரியத்தின் மீது இன்னோர் அணை கட்டுவதோ இந்திய இறையாண்மைக்கு ஏற்புடையதல்ல… ஆகவே சட்டத்திற்கும் மரபுரிமைக்கும் இணங்க தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு கர்நாடக சகோதரர்கள் கைகொடுக்க வேண்டும்.

உலகத் துயரங்களில் மிகவும் வலி தருவது உரிமையைப் பிச்சை கேட்பதுதான். உரிமை என்பது பிச்சைப்பொருள் அல்ல. வானம் கண் திறப்பதையும் கர்நாடகம் அணை திறப்பதையும் நம்பித்தான் எங்கள் பாசனப் பரப்பில் பயிர் வளர்க்கிறோம். தமிழ்நாட்டு முதலமைச்சர் நலத்தில் அக்கறை கொண்ட கர்நாடக முதலமைச்சர் தமிழ்நாட்டு நலத்திலும் அக்கறை காட்ட வேண்டுமென்று ஒரு விவசாயி மகன் என்ற முறையில் வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.