ஆயிரம்விளக்கு தொகுதியை விட்டு கொளத்தூர் தொகுதிக்கு மாறிவந்தது ஏன்? என்பதற்கு மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று தனது தொகுதியான கொளத்தூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அங்கு நடந்த மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
சட்டமன்ற உறுப்பினராக இருந்து நான் சார்ந்திருக்கக்கூடிய என்னுடைய இயக்கத்துக்கு என்ன பெருமை தேடித் தந்திருக்கிறேனோ அதைவிட பன்மடங்கு பெருமையை இந்தப் பகுதிகளில் இருக்கக்கூடிய மக்களுக்கு தேடித்தர வேண்டும். கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, அரசியலுக்கு அப்பாற்பட்டு என்னுடையப் பணி இருந்திட வேண்டும் என்று நான் எண்ணிக் கொண்டிருக்கக் கூடியவன்.
இந்தப் பணியை நான் முடிந்த வரையில் நிறைவேற்றி தந்திருக்கிறேன் என்பதை நீங்களும் ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள். அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை என்பதை நான் உணர்ந்திருக்கிறேன்.
நான் ஆயிரம்விளக்கு தொகுதியில் 4 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கே பணியாற்றி இருக்கிறேன். கடந்த முறை தொகுதி மாறி இந்தத் தொகுதிக்கு வர வேண்டும் என்று விரும்பினேன். மறைந்த தலைவர் கருணாநிதி, என்னிடத்தில் இது பற்றி காரணம் கேட்டதுண்டு.
நான் ஆயிரம்விளக்கு தொகுதியில் இருந்து பல பணிகளை நிறைவேற்றி முடித்திருக்கிறேன். கொளத்தூர் சட்டமன்ற தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தொகுதிக்கு பல முன்னேற்றங்களை ஏற்படுத்தி தர வேண்டும் என்கிற உணர்வோடு நான் தொகுதி மாறி செல்லுகிறேன் என பெருமையோடு அவரிடம் சொன்னதுண்டு.
நான் கட்சியிலே ஒரு மிகப்பெரிய பொறுப்பில் இருக்கிற காரணத்தால் தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய பல்வேறு மாவட்டங்களுக்கு தொடர்ந்து சுற்றுப்பயணத்தை மேற்கொண்டதுண்டு. அப்படி வெளியூர் பயணத்தை முடித்துவிட்டு சென்னைக்கு வருகிறபோதெல்லாம் முதல் பணியாக நம்முடைய தொகுதிக்கு தான் தொடர்ந்து வரக்கூடிய வழக்கத்தை வைத்துக்கொண்டு இருக்கிறேன்.
அறிவாலயத்தில் பணி இருக்கிறது. கட்சியிலே பொறுப்பில் இருக்கக்கூடிய காரணத்தால் அந்தப் பணிகளும் இருக்கிறது. பல பணிகள் இருந்தாலும் அந்த பணிகளுக்கு இடையில் 5 நிமிடமோ அல்லது 10 நிமிடமோ இல்லை, ஒரு அரை நாள் கிடைத்தால் போதும் உடனே கொளத்தூர் வந்து விடுவேன்.
நான் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு சென்னைக்கு வருகிறபோது கொளத்தூரிலும் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுவிட்டு அதற்குப் பிறகு அறிவாலயத்துக்குச் சென்று கருணாநிதியை சந்திப்பேன். ‘இப்பத்தான் வருகிறாயா?’ என்று அவர் கேட்பார். இல்லை கொளத்தூர் போய்விட்டு வந்தேன் என்று சொல்லுவேன்.
‘கொளத்தூரை விடவே மாட்டியா?’ என்று கேட்பார். என் மீது நம்பிக்கை வைத்து தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பேன். தொடர்ந்து அங்குதான் எப்போதும் நிற்கப் போகிறாயா? என்று கேட்பார். நான் நிற்கிறேனோ, இல்லையோ நம்முடைய இயக்கம் தொடர்ந்து அங்கு வெற்றிபெற வேண்டும். அதற்காகத் தான் அவர்களை பார்க்கச் செல்கிறேன். அந்த நம்பிக்கை பெறக்கூடிய சூழ்நிலையில் தான் அப்பணியை நான் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேன் என்று நான் அடிக்கடி எடுத்துச் சொல்வது உண்டு. இவ்வாறு அவர் பேசினார்.