மருத்துவமனையில் ஜெயலலிதா உடல்நிலை தொடர்ந்து கண்காணிப்பு

324 0

201609230227257137_tn-cm-jayalalithaa-admitted-in-private-hospital-due-to-fever_secvpfமருத்துவமனையில் தொடர்ந்து 4வது நாளாக சிகிச்சைப்பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளதால் டாக்டர்களின் ஆலோசனைப் படி நாளை அவர் வீடு திரும்ப வாய்ப்பு இருப்பதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.முதல்-அமைச்சர் ஜெயலலிதா திடீர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த வியாழக்கிழமை இரவு சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து இழப்பு இருந்ததால் டாக்டர்கள் தீவிர சிகிச்சை மேற்கொண்டனர். இதில் ஜெயலலிதா உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. காய்ச்சலும் குணப்படுத்தப்பட்டது.இதனால் அவர் வழக்கம் போல் சாப்பிட தொடங்கினார். ஆனாலும் ஜெயலலிதாவின் உடல் நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இதற்காக அவர் ஆஸ்பத்திரியிலேயே 4 நாட்களாக தங்கி இருக்கிறார். தினமும் காலை, மாலை, இரவு என அவரது உடல் நிலை பரிசோதிக்கப்படுகிறது.

இன்று காலையும், மதியமும் அவரது உடல் நிலை டாக்டர்களால் பரிசோதிக்கப்பட்டது. இதில் அவர் நன்றாக குணம் அடைந்துள்ளது தெரியவந்தது.ஆனாலும் அவருக்கு மீண்டும் காய்ச்சல் வந்து விடக்கூடாது என்பதற்காக ஆஸ்பத்திரியிலேயே வைத்துள்ளனர். ஜெயலலிதாவுக்கு உதவியாக சசிகலா, இளவரசி ஆகியோர் ஆஸ்பத்திரியில் தங்கி உள்ளனர்.

ஜெயலலிதா சாப்பிட போயஸ்கார்டனில் இருந்து உணவு கொண்டு வரப்பட்டு வழங்கப்படுகிறது.

ஜெயலலிதா சிகிச்சை பெறும் வார்டில் உயர் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதாவை பார்க்க தலைமை செயலாளர் ராம மோகனராவ், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்பட ஏராளமான அதிகாரிகள் வந்திருந்தனர். அவர்கள் டாக்டர்களிடம் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றி கேட்டறிந்தனர்.

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களும் ஆஸ்பத்திரிக்கு வந்து செல்கின்றனர். முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டக் கழக செயலாளர்களும் ஆஸ்பத்திரிக்கு வந்து சென்ற வண்ணம் உள்ளனர்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா பூரண குணம் அடைய வேண்டி கோவில்களில் நடத்தப்படும் சிறப்பு பூஜை பிரசாதங்களையும் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று வழங்கினார்கள்.  ஆஸ்பத்திரி முன்பு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர் அணியினர் ஏராளமானோர் தினமும் கூடி நிற்கின்றனர். ஆஸ்பத்திரி முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு அதிகம் போடப்பட்டு உள்ளது.

ஜெயலலிதா வேகமாக குணம் அடைந்துள்ளதால் டாக்டர்களின் ஆலோசனைப் படி நாளை அவர் வீடு திரும்ப வாய்ப்பு இருப்பதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.அ.தி.மு.க.வை சேர்ந்த மகளிர் அணியினர், தொண்டர்கள் சிலர் அப்பல்லோ ஆஸ்பத்திரி முன்பு தரையில் அமர்ந்து அங்கேயே முகாமிட்டுள்ளனர்.