சீனாவில் ரூ.35 ஆயிரம் கோடியில் பிரமாண்ட சுற்றுலா பூங்கா திறப்பு

314 0

சீனாவில் ரூ.35 ஆயிரம் கோடி மதிப்பில் ‘ஹெபே வாண்டா சிட்டி’ சுற்றுலா பூங்கா திறக்கப்பட்டுள்ளது.

சீனாவின் மேற்கு பகுதியில் உள்ள ஹெபே நகரில் மிக பிரமாண்டமான சுற்றுலா பூங்கா திறக்கப்பட்டுள்ளது. இது 160 ஹெக்டேர் நிலபரப்பளவில் அமைந்துள்ளது.

‘ஹெபே வாண்டா சிட்டி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த பூங்காவில் கேளிக்கை பூங்கா, ஓட்டல்கள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளன.

டாலியன் வாண்டா குரூப் நிறுவனம் இதை உருவாக்கியுள்ளது. இந்த சுற்றுலா பூங்கா அமைக்க ரூ.35 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா பூங்காவின் உரிமையாளர் வாங் ஜியாங்லின். சீனாவில் உள்ள கோடீசுவரர்களில் இவரும் ஒருவர்.

சீனாவின் ஷாங்காய் நகரில் கடந்த ஜூன் மாதம் ரூ.45 ஆயிரம் கோடி செலவில் வால்ட் டிஸ்னி நிறுவனம் சுற்றுலா பூங்கா அமைத்துள்ளது.

தனது தொழில் போட்டி எதிரியான வால்ட் டிஸ்னிக்கு போட்டியாக இதை உருவாக்கியுள்ளதாக வாங் ஜியாங்லின் தெரிவித்தார்.