சர்வதேச சமூகம் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் என்று எதிர்பார்க்க முடியாது! – கஜேந்திரகுமார்

5473 0

IMG_7119பொறுப்புக்கூறல் விடயத்தில் ஐ.நாவோ, சர்வதேச சமூகமோ இலங்கை அரசுக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கும் என எதிர்பார்க்க முடியாது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.ஜெனீவாவில் இடம்பெற்று வரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 32வது கூட்டத் தொடரில் இலங்கை குறித்த மனித உரிமைகள் பேரவை ஆணையாளரின் வாய்மூல அறிக்கை வெளியிடப்படவுள்ள நிலையில் ஜெனீவா சென்றுள்ள கஜேந்திரகுமார், அங்கு இடம்பெறும் பக்க நிகழ்வுகளில் கலந்து கொள்வதுடன், மனித உரிமை அமைப்புக்கள், அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தி வருகின்றார்.

அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு ஹியூமன் ரைட் வோச் அமைப்பின் பிரசிதிகளுடன் பேச்சு நடத்திய கஜேந்திரகுமார், ‘சர்வதேச சமூகம் மகிந்த ராஜபக்‌சவையே ஒரு கொடூரமானவராகப் பார்த்தது. அவர் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டுள்ள நிலை வந்திருந்தாலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய பதில் கொடுக்கப்படவில்லை. முழுமையான பொறுப்புக்கூறலும், நிரந்தரமான அரசியல் தீர்வும்தான் இன்று அவர்களுக்குத் தேவை’ எனச் சுட்டிக்காட்டினார்.

இதன் அடிப்படையில் மகிந்த ராஜபக்‌ச அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆனால், ஆட்சி மாறிய பின்னர் அவ்வாறான அழுத்தம் கொடுக்கப்படவில்லை. ஆனால், இதுவரையில் முழுமையான பொறுப்புக்கூறலுக்கான ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. அரசியல் தீர்வுக்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்படவில்லை. இந்த அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ஐ.நா. செயற்படும் என எதிர்பார்க்க முடியாதுள்ளது. மேற்கு நாடுகளின் அரசுகள் அவ்வாறு செயற்படும் நிலைப்பாட்டில் இருப்பதாகத் தெரியவில்லை.

அரச சார்பற்ற நிறுவனங்களும், மனித உரிமை அமைப்புக்களுமே இந்தப் பிரச்சினையை இப்போதும் முன்னெடுத்து வருகின்றன எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விளக்கியிருக்கின்றார்.

இதேவேளையில், நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை ஜெனீவாவில் நடைபெறவுள்ள பக்க நிகழ்வு ஒன்றில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார். இதில் கஜேந்திரகுமாரும் பங்குகொள்வார் எனத் தெரிகின்றது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் வாய்மூல அறிக்கை புதன்கிழமை வெளிவரவுள்ளது.

Leave a comment