உழைக்கும் கரங்களை உதாசீனம் செய்யாதே மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வழங்கு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ் கைதடியில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழக சித்த வைத்திய துறை மாணவர்களின் ஏற்பாட்டில் வைத்தியத்துறை வளாகத்திற்கு முன்பாக A9 வீதியில் இன்று காலை 12 மணிக்கு இக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க வேண்டுமென வலியுறுத்தி தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தப் போராட்டத்திற்கு வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல இடங்களிலிருந்து பலரும் ஆதரவைத் தெரிவுத்துள்ளனர். இதற்கமைய பலரும் பல்வேறு இடங்களிலும் இதற்கு ஆதரவான போராட்டங்களை முன்னெடுத்திருக்கின்றனர்.
இவ்வாறானதொரு நிலையிலேயே சித்த வைத்திய மாணவர்களும் தமது ஆதரவைத் தெரிவுத்தும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் இன்றைய தினம் போராட்டத்தை நடாத்தியுள்ளனர்.
உழைப்புற்கேற்ப ஊதியத்தை கொடு, உழைக்கும் கரங்களை உதாசீனம் செய்யாதே, ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு தீபாவளிக்கு முன்னதாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பதாகைகளைத் தாங்கியவாறு கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.இப் போராட்டத்தில் சித்த வைத்தியத்துறை மற்றும் பல்கலைக்கழக ஏனைய துறைகளைச் சேர்ந்த மாணவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.