பலூசிஸ்தான் தலைவரை கைது செய்ய பாகிஸ்தான் தீவிரம்

372 0

201609251128198733_pakistan-to-approach-interpol-for-extradition-of-brahamdagh_secvpfசுவிட்சர்லாந்தில் இருந்தபடி இந்தியாவிடம் அடைக்கலம் கேட்டு விண்ணப்பித்துள்ள பலூசிஸ்தான் விடுதலை இயக்கத் தலைவரை கைது செய்ய சர்வதேச போலீசான இன்டர்போலின் உதவியை நாட பாகிஸ்தான் அரசு தீர்மானித்துள்ளது.
பாகிஸ்தானில் உள்ள நான்கு மாகாணங்களில் ஒன்றான பலூசிஸ்தானில், அரசுக்கு எதிராக அங்குள்ள மக்கள் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பலூசிஸ்தானை தனிநாடாக அறிவிக்கும்படியும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்துகின்றனர்.

இந்த அமைப்புகளுக்கு தலைமையேற்று பலூசிஸ்தானின் விடுதலைக்காகப் போராடிய பலூச் தேசியவாத தலைவர் நவாப் அக்பர் புக்டி, பாகிஸ்தான் ராணுவத்தால் கடந்த 2006-ம் ஆண்டு கொல்லப்பட்டார்.

அவரது மறைவுக்கு பின்னர் அக்பர் புக்டியின் பேரனான பிரகும்தாக் புக்டி, ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு தப்பிச் சென்று அரசியல் அகதியாக தஞ்சம் அடைந்தார். அவரை தங்களிடம் ஒப்படைக்கும்படி பாகிஸ்தான் தொடர்ந்து வலியுறுத்திவந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து அவர் சுவிட்சர்லாந்துக்கு தப்பிச் சென்றார்.

சமீபத்தில், பலூசிஸ்தான் போராட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆதரவு தெரிவித்ததையடுத்து, பிரகும்தாக் புக்டி, இந்தியாவில் அடைக்கலம் புக முடிவு செய்தார். பிரகும்தாக் புக்டியின் முடிவுக்கு, பலூசிஸ்தான் குடியரசு கட்சியும் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்நிலையில், சுவிட்ஸர்லாந்து தலைநகர் ஜெனிவாவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு சென்ற பிரகும்தாக் புக்டி, இந்தியாவிடம் அடைக்கலம் கேட்டு முறைப்படி விண்ணப்பித்துள்ளார். அவரது விண்ணப்பத்தை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தெரிகிறது.

இதற்கிடையில், பிரகும்தாக் புக்டிக்கு அடைக்கலம் கொடுத்தால் இந்தியாவும் அதிகாரபூர்வமாகவும், வெளிப்படையாகவும் தீவிரவாதத்தை ஆதரிப்பதாக கருத வேண்டும் என பாகிஸ்தான் எச்சரித்திருந்தது.

இன்னும் சிலநாட்களில் பிரகும்தாக் புக்டியின் விண்ணப்பத்தின் மீதான பரிசீலனை முடிந்து அவருக்கு இந்தியா அரசியல் தஞ்சம் அளிக்கும் என தெரியவந்துள்ளதால், அதற்கு முன்னதாக தற்போது சுவிட்சர்லாந்து தலைநகரான ஜெனிவாவில் தங்கியுள்ள பிரகும்தாக் புக்டியை எப்படியாவது கைது செய்து இந்தியாவுக்கு போகாதபடி தடுத்துவிட வேண்டும் என பாகிஸ்தான் மும்முரமாக செயல்பட்டு வருகிறது.

சுவிட்சர்லாந்தில் தங்கியுள்ள பிரகும்தாக் புக்டியை கைது செய்து, நாடுகடத்தி, தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என சர்வதேச போலீஸ் படையான இண்டர்போலுக்கு பாகிஸ்தான் நாட்டு உளவுத்துறை ஓரிரு நாட்களில் முறைப்படி கடிதம் அனுப்ப தீர்மானித்துள்ளதாக பாகிஸ்தான் உள்துறை மந்திரி நிசார் அலி கான் நேற்று தெரிவித்துள்ளார்.