நாட்டினதும், மக்களினதும் நலனுக்காக தற்போது தற்காலிக அரசாங்கத்தையே நியமித்திருக்கின்றோம் எனத் தெரிவித்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, வெகு விரைவில் மக்கள் ஆணையுடன் கூடிய அரசாங்கத்தை பொதுத் தேர்தலூடாக அமைப்பதே எமது நோக்கமாகும் எனவும் குறிப்பிட்டார்.
அதற்காகவே நாங்கள் தற்போது விரைவாக பொதுத்தேர்தல் ஒன்றை பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றோம். அவ்வாறு பெற்றுக்கொள்ளப்படுகின்ற மக்கள் ஆணையுடன் கூடிய அரசாங்கத்தில் நான் முக்கிய பொறுப்பை எடுத்து மக்களுக்கு சேவையாற்றுவேன்.
எப்படியிருப்பினும் இந்த தற்காலிக அரசாங்கத்தின் ஊடாக வடக்கு மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும். நான் முன்னர் முன்வைத்த காணிவிடுவிப்பு வரைபுக்கு அமைய இராணுவத்திற்கு அவசியமான காணிகளை மட்டும் வைத்துக்கொண்டு ஏனையவற்றை விடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவேன் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளமை மற்றும் புதிய பிரதமர் நியமனம் பெற்றுள்ளமை தொடர்பில் விபரிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.