சென்னையில் தேசிய ஒற்றுமை தின தொடர் ஓட்டம்

261 0

சென்னையில் தேசிய ஒற்றுமை தின தொடர் ஓட்டத்தில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்.

சுதந்திர போராட்ட வீரர் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளான அக்டோபர் 31-ந்தேதி தேசிய ஒற்றுமை தினமாக ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளான நேற்று சென்னை போர் நினைவுச்சின்னம் அருகே தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. பெருநகர சென்னை மாநகராட்சியின் கமிஷனர் தா.கார்த்திகேயன் தேசிய ஒற்றுமை தின உறுதிமொழியை வாசித்தார்.

மத்திய பாதுகாப்பு மந்திரி நிர்மலா சீதாராமன், அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, பா.பாலகிருஷ்ணா ரெட்டி, எம்.பி.க்கள் ஜெயவர்தன், எஸ்.ஆர்.விஜயகுமார், மத்திய, மாநில அரசு அதிகாரிகள், மாணவ-மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர்.

இதையடுத்து தொடர் ஓட்டத்தை நிர்மலா சீதாராமன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் அரசு அதிகாரிகள், வங்கி அதிகாரிகள், தனியார் கம்பெனி ஊழியர்கள், மாணவ-மாணவிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்று ஓடினர்.

போர் நினைவுச்சின்னம், துறைமுக பொறுப்புக்கழக அதிகாரிகள் குடியிருப்பு, சத்யாநகர், சுவாமி சிவானந்தா சாலை, நாவலர் நகர், அண்ணா சாலை வழியாக தீவுத்திடல் அருகே உள்ள ராணுவ பூங்காவில் தொடர் ஓட்டம் நிறைவடைந்தது.

இதில், நிர்மலா சீதாராமன், அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, பா.பாலகிருஷ்ணா ரெட்டி, எம்.பி.க்கள் ஜெயவர்தன், எஸ்.ஆர்.விஜயகுமார் ஆகியோரும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பங்கேற்றனர்.

அமைச்சர்கள் வழக்கமாக அணியும் வேட்டி, கதர் சட்டைக்கு விடை கொடுத்து டி-சர்ட் மற்றும் ‘டிராக் பேண்ட்’ அணிந்திருந்தனர். தொடர் ஓட்டத்தில் பங்கேற்றபோது சிவானந்தா சாலையில் துப்புரவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தொழிலாளர்களுடன் நிர்மலா சீதாராமன் கைகுலுக்கி நலம் விசாரித்தார். இதையடுத்து மாணவிகள் சிலரும் அவருடன் ‘செல்பி’ எடுத்தனர். தொடர் ஓட்ட இலக்கான 2.6 கி.மீ. தூரத்தை, நிர்மலா சீதாராமன் மற்றும் அமைச்சர்கள் சளைக்காமல் நடந்து சென்றனர்.

தொடர் ஓட்டத்தை நிறைவு செய்த பின்னர் நிர்மலா சீதாராமன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சர்தார் வல்லபாய் படேலை நினைவு கூறும் வகையில் அவருடைய பிறந்தநாளை நாடு முழுவதும் ஒற்றுமை தினமாக கொண்டாடுகிறோம். நாடு முழுவதும் ஒருமைப்பாடு, ஒற்றுமையை, ஒரே அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வந்த முயற்சி முழுவதும் சர்தார் வல்லபாய் படேலுக்கு உரியது. அவர் நாட்டை ஒருங்கிணைத்த ஒரு தலைவர் என்பது மட்டுமல்லாமல், விவசாயிகள் மீது அதிக பற்று வைத்திருந்தவரும் ஆவார். அதனால்தான் நாடு முழுவதும் ஒவ்வொரு பஞ்சாயத்து அளவில் இருந்து விவசாயிகளின் ஏர் முனையில் இருக்கும் ஒரு துண்டு இரும்பை எடுத்து, அதனை சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைப்பதற்கு அனுப்பினோம்.

அப்படி உருவான உலகிலேயே மிக உயரமான சிலை இன்று (நேற்று) நிறுவப்பட்டுள்ளது. இதனை குறிக்கும் வகையில் தான் ஒவ்வொரு மாநிலத்தில் நடைபெறும் ஒற்றுமை தின ஓட்டத்தில் மந்திரிகள் பங்கேற்கிறோம். நாம் நடத்திய தொடர் ஓட்டம் அற்புதமாக இருந்தது. நாடு ஒற்றுமையுடன் இருப்பதற்கு இளைய சமுதாயம் இன்னும் நிறைய செய்யவேண்டியது இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment