உலக வங்கி இன்று வெளியிட்ட சுலபமாக தொழில் செய்ய தகுந்த நாடுகள் பட்டியலில் இந்தியா நூறில் இருந்து 23 புள்ளிகள் முன்னேறி 77-ம் இடத்தை பிடித்துள்ளது.
தொழில் தொடங்குவதற்கு எளிதான சூழல் உள்ள நாடுகளின் பட்டியலை உலக வங்கி ஆண்டுதோறும் வரிசைப்படுத்தி, பட்டியலிட்டு வெளியிட்டு வருகிறது.
கடந்த 2004-ம் ஆண்டில் இந்த பட்டியலில் இந்தியா 142-வது இடத்தில் இருந்தது. பின்னர் படிப்படியாக முன்னேறி கடந்த 2016-ம் ஆண்டில் வெளியான 190 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா 130-வது இடத்தில் இருந்தது. கடந்த (2017) ஆண்டில் மேலும் 30 இடங்கள் முன்னேறி டாப்- 100 நாடுகளில் ஒன்றாக உயர்ந்தது.
இந்நிலையில், உலக வங்கி இன்று வெளியிட்ட இந்த (2018) ஆண்டுக்கான சுலபமாக தொழில் செய்ய தகுந்த நாடுகள் பட்டியலில் இந்தியா நூறில் இருந்து 23 புள்ளிகள் முன்னேறி 77-ம் இடத்தை பிடித்துள்ளது.
மேலும், கடந்த 2014-ம் ஆண்டில் தெற்காசிய நாடுகள் அளவில் ஆறாவது இடத்தில் இருந்த இந்தியா இந்த அபரிமிதமான முன்னேற்றத்தின் மூலம் தெற்காசியாவிலேயே தொழில் தொடங்குவதற்கு எளிதான சூழல் உள்ள நாடுகளில் முதலிடத்தையும் இந்தியா தற்போது பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.