மகிந்தவை பிரதமராக அங்கீகரித்த சம்பந்தன்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சரமாரிக் குற்றச்சாட்டு

359 0

எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் சாதாரண பாராளுமன்ற உறுப்பினர் பெடியன் மகிந்த ராஜபக்ச சந்திப்புக்கு அழைத்த போது நீ என்னுடைய இல்லத்திற்கு வா..சந்தித்துக் கதைப்போம் என அழைத்திருக்கலாமே. அதுமாத்திரமல்லாமல் சாதாரண பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச எனில் அவரிடம் ஏன் அரசியலமைப்பை உருவாக்கும் வேலைத் திட்டம் தொடர வேண்டும், ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானம் நடைமுறைப்படுத்த வேண்டும் ஆகிய நிபந்தனைகளை முன்வைக்க வேண்டும்?, பிரதமரென்ற அடிப்படையில் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்து விட்டு அதனை வேறு விதமாகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத் திசை திருப்ப முற்படுவது ஏன்? இதற்கெல்லாம் காரணம் கூட்டமைப்பின் எஜமானர்களான வல்லரசுகளே எனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சராமரியாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ்.கொக்குவிலுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இன்று புதன்கிழமை(31) பிற்பகல் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மகிந்த ராஜபக்ச பிரதமராகவிருக்கின்றார் என்பதை ஏற்றுக் கொண்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மகிந்த ராஜபக்சவை அவரது இல்லத்தில் நேரடியாகச் சென்று சந்தித்துள்ளார். இவ்வாறு அவர் சந்தித்த பின்னர் கடும் விமர்சனங்கள் வெளிவந்தன. சம்பந்தன் தன்னுடைய எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பாதுகாப்பதற்கும், நாடாளுமன்றப் பிரதிக் குழுக்களின் உபதலைவராகவுள்ள செல்வம் அடைக்கலநாதனின் பதவியைப் பாதுகாப்பதற்கும், அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளைப் பாதுகாப்பதற்கும் தான் மகிந்த ராஜபக்சவை சம்பந்தன் நேரடியாகச் சந்தித்துள்ளார் என்ற பரவலான விமர்சனங்கள் எழுந்தன. இதன் உச்சக்கட்டமாக வல்லரசுகள் நீங்கள் எவ்வாறு மகிந்த ராஜபக்சவை சந்திக்கலாம் எனக் கடுமையாக கூட்டமைப்பை எச்சரித்தார்கள்.

இதனையடுத்துத் தாங்கள் செய்த தவறுகளை ஏதோவொரு வகையில் நியாயப்படுத்த வேண்டுமென்பதற்காகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் “எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்சவின் அழைப்பின் பேரில் அவருடைய இல்லத்தில் சென்று சந்தித்ததாக ஊடகங்களுக்கு கருத்துக்கள் தெரிவித்தார்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு விதித்துள்ள நிபந்தனைகளும், மகிந்த ராஜபக்சவை நேரடியாகச் சென்று சந்தித்ததும் தமிழ்மக்களின் நலன் கருதிய செயற்பாடுகளல்ல. இவையனைத்தும் அவர்களுடைய சுயநலன்களுக்கானது மட்டுமே.

கடந்த-26 ஆம் திகதி இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மகிந்த ராஜபக்சவைப் பிரதமராக நியமித்ததைத் தொடர்ந்து பலவிதமான கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. இந்த நியமனம் சட்டபூர்வமானதா? இல்லையா? என்பது தொடர்பில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

மைத்திரிபால சிறிசேன மகிந்த ராஜபக்சவின் நியமனம் சட்டபூர்வமாக இடம்பெற்றதாகவும், இந்த நியமனம் சட்டத்திற்கு முரணாக இடம்பெற்றதாக ஐக்கிய தேசியக் கட்சியும், ஏனையவர்களும் கூறிக் கொண்டு வருகின்றனர். இலங்கையில் ரணில் தான் தொடர்ந்தும் பிரதமராகப் பதவி வகிப்பதாக இந்தியாவும், மேற்கு நாடுகளும் கருத்துக்கள் கூறி வருகின்றன.

மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடு இலங்கையின் அரசியலமைப்பை மீறுகின்ற வகையில் காணப்படுவதாகவும், பாராளுமன்ற உறுப்பினர்களின் முடிவின் பிரகாரம் மட்டும் தான் புதிய பிரதமரை நியமிக்கலாம் என்ற கோணத்தில் தான் மேற்படி நாடுகள் கருத்துக்கள் வெளியிட்டு வருகின்றன.

தற்போதைய சூழலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மகிந்த ராஜபக்ச அணிக்கும், ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடையாது. இந்த இரண்டு தரப்புக்களுக்கும் பெரும்பான்மையில்லாத சூழலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, ஜே. வி.பி, சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ், மலையகக் கட்சிகள் ஆகியவற்றுடன் பேரம் பேசி ஏதோவொரு சூழலில் இணக்கப்பாடு வருவதன் மூலம் மட்டும் தான் பெரும்பான்மையைப் பாராளுமன்றத்தில் நிரூபிக்கக் கூடிய நிலைமை காணப்படுகின்றது.

தற்போது இலங்கையில் ஏற்பட்டிருக்கும் குழப்பகரமான நிலைமை வெறுமனே ஐக்கிய தேசியக் கட்சிக்கும், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் அல்லது மகிந்த ராஜபக்சவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவிற்குமிடையில் இடம்பெறுகின்ற மோதலல்ல. இதன் பின்னால் பூகோள அரசியல் நலன்கள், வல்லரசுகளின் அரசியல் நலன்கள் என்பன காணப்படுகின்றன.

இவ்வாறானதொரு நிலையில் நாங்கள் இதுசம்பந்தமாக ஈழத் தமிழ்மக்கள் என்ற வகையில் நாங்கள் மிகவும் அவதானமாகவிருக்க வேண்டும்.அவசரப்பட்டு நாங்கள் எந்தவிதமான முடிவுகளையும் எடுக்கக் கூடாது. மிக முக்கியமாக தமிழ்த்தேசத்தினுடைய நலன்களை மையப்படுத்தி மாத்திரம் தான் குறித்த முடிவுகள் அமைய வேண்டும். அதனை விடுத்து வேறு எந்தவிடயங்களையும் மையப்படுத்தி முடிவுகளை எடுக்கக் கூடாது என நேற்றைய தினம் தெளிவாக எடுத்துக் கூறியிருந்தோம்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கடந்த- 2009 மேமாதத்திலிருந்து வல்லரசுகளுடைய குறிப்பாக மேற்கு நாடுகளுடைய எடுபிடிகளாகவும், கைக்கூலிகளாகவும் செயற்படுகின்றார்களே தவிரத் தமிழ்த் தேசத்தினுடைய நலன்களுக்காகச் செயற்படவில்லை. பேரம் பேச வேண்டிய இடங்களில் பேரம் பேசாமல் வல்லரசுகளின் நலன்களுக்காக மட்டும் செயற்பட்டு வருகின்றார்கள் எனக் குற்றம் சாட்டி வந்தோம்.

இது தொடர்பில் நாங்கள் எங்கள் மக்களுக்கு கடந்த எட்டு வருடங்களாக காட்டமாக எடுத்துக் கூறி வந்த நிலையில் பூகோளப் போட்டி தொடர்பாக கூறும் போதெல்லாம் எங்களை விமர்சனம் செய்தாலும் கூடத் பூகோளப் போட்டி தான் இலங்கையில் இடம்பெறுகின்றது என்பதைத் தற்போது பலரும் ஏற்றுக் கொள்கின்றதொரு மனநிலை ஏற்பட்டுள்ளது.

இதுவரை கொள்கை விடயத்தில் சரியாகச் செயற்பட்டு வந்த தரப்புக்களான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, தமிழ்மக்கள் பேரவை, விக்கினேஸ்வரன் ஐயா போன்றவர்கள் ஒன்றுபட்டுப் பேரம் பேசக் கூடிய நேராமையானதொரு தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டும். எனவே, தமிழ்மக்களின் நலன்களுக்கான பேரம் பேசலை விடுத்து வேறு தரப்புக்களின் நலன்களுக்காக விலை போகக் கூடிய தரப்புக்களையும் இந்த அணிக்குள் சேர்த்துத் தொடர்ந்தும் பயணிக்க முடியாது என்ற வகையில் தான் நாங்கள் புளொட் மற்றும் ஈ.பி. ஆர்.எல்.எவ் ஆகிய தரப்புக்களைத் தமிழ்மக்கள் பேரவையிலிருந்து அகற்ற வேண்டுமென நேற்றைய தினம் கூறியுள்ளோம்.

தற்போது தமிழ்மக்களின் பிரதிநிதிகளென்று சொல்லக் கூடியவர்கள் பாராளுமன்றத்தில் கேவலமான முறையில் தமிழினத்தின் நலன்களை விற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இதுதொடர்பில் தெளிவுபடுத்துவதற்காகவே இன்றைய ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்து நடாத்துகின்றோம்.

கடந்த-27 ஆம் திகதி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரின் கருத்தின் ஊடாகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியது.

மகிந்த ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்க ஆகிய இரண்டு தரப்புக்களிலும் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது வெறுமனவே முகங்களைப் பார்த்து நாங்கள் முடிவெடுக்க மாட்டோம். கொள்கை ரீதியாகவே முடிவெடுப்போம் எனக் கூறினார்கள். குறிப்பாகப் புதிய அரசியலமைப்புத் தொடர்பாக வாக்குறுதிகள் வழங்கப்படும் பட்சத்திலும் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்துகின்ற விடயங்கள் தொடர்பாக வழங்கப்படும் வாக்குறுதிகளின் அடிப்படையிலும் தான் தங்களுடைய நடவடிக்கைகள் அமையுமெனக் கூறியிருந்தார்கள்.

இலங்கையில் இரண்டு பிரதமர்கள் காணப்படும் போக்குக் காணப்படுகின்றது. யார் சட்ட ரீதியான பிரதமராக ஏற்றுக் கொள்ளப்படப் போகின்றார் என்பதைத் தீர்மானிப்பதில் தங்களுக்கும் ஒரு பங்கிருக்கின்றது என்ற அடிப்படையில் தான் மேற்படி கருத்துக்களைக் கூறியிருந்தார். யார் தற்போதைய பிரதமர் என்பதில் தெளிவற்ற தன்மை காணப்படும் நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத் தான் இதுதொடர்பில் தீர்மானிக்கப் போகின்றது என்ற அடிப்படையால் தான் மேற்படி கருத்துக்களை நோக்க முடிகின்றது.

அரசியலமைப்பை உருவாக்கும் வேலைத் திட்டம் தொடர வேண்டும், ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானம் நடைமுறைப்படுத்த வேண்டும் ஆகிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள நிபந்தனைகள் தமிழ்மக்களின் நலன்களை முற்றுமுழுதாக இல்லாமல் செய்கின்ற நிலைப்பாடுகள் என்பதை நாங்களனைவரும் சரியான வகையில் விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஜெனிவாத் தீர்மானம் உள்ளக விசாரணையை வலியுறுத்தி வரும் நிலையில் அந்தத் தீர்மானத்தைத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினராகிய நாங்கள் நிராகரித்து வந்தோம். அந்தத் தீர்மானத்தைக் கூட அரசாங்கத்திலுள்ள தரப்புக்கள் இதுவரை நடைமுறைப்படுத்தத் தயாராகவில்லாத சூழலே இருந்து வந்தது.

மகிந்த ராஜ்பக்ச, மைத்திரிபால சிறிசேன மட்டுமல்லாமல் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கியதேசியக் கட்சியிலிருந்து வெளிவிவகார அமைச்சராகப் பதவி வகித்த மங்கள சமரவீரவும், பிரதி வெளிவிவகார அமைச்சராகவிருந்த ஹர்சடி சில்வாவும் ஜெனிவாவுக்குச் சென்று வெளிநாட்டுக் கலப்புப் பொறிமுறைக்கு இடமில்லை எனப் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார்கள்.

புதிய அரசியலமைப்பு விடயத்தில் ஒற்றையாட்சி அரசியலமைப்புத் தான் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது தமிழ்மக்களுக்கு நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த ஒற்றையாட்சி அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கு யார் வாக்குறுதி வழங்குகின்றார்களோ அவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் தான் கூட்டமைப்பு தாம் செயற்படுகின்றார்கள் என்பது அவர்களின் நிபந்தனை மூலம் வெளிப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்ச தனக்குப் பெரும்பான்மையிருக்கின்றது என்ற நம்பிக்கையிலேயே பிரதமர் பதவியைப் பொறுப்பேற்றுள்ளார். இவ்வாறான நிலையில் அவர் வழங்குகின்ற வாக்குறுதிகள் உண்மையான வாக்குறுதிகளாகவே காணப்படுமென நினைப்பது எங்களுடைய அறிவீனம். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இதுவரை காலமும் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்தும், மைத்திரிபால சிறிசேனவிடமிருந்தும் பல்வேறு வாக்குறுதிகளைப் பெற்றிருந்தாலும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தங்களை ஏமாற்றுகின்றார்களெனக் கூறவில்லை.

மகிந்த ராஜபக்ச எவ்வாறான தரப்பு என்பது எம்மனைவருக்கும் தெரியும். ஆனால், கடந்த மூன்றரை வருடங்களாக ரணில்- மைத்திரி அரசாங்கம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை ஏமாற்றியிருக்கின்றது என்பது தெளிவாகப் புலப்பட்டுள்ள நிலையில் நெருக்கடியான இந்த வேளையில் மீண்டும் ரணில் தரப்பிடமிருந்தா நீங்கள் வாக்குறுதிகள் பெற்றுக் கொள்ளப் போகின்றீர்கள்? அவ்வாறு வழங்கப்படும் வாக்குறுதிகள் மூலம் எவ்வாறான நன்மைகள் கிடைக்கப் போகின்றன? மீண்டும் எமது மக்களை ஏமாற்றுவதற்காக அவர்களை முட்டாளாக்கித் தங்களுடைய எஜமானர்களான வல்லரசுகள் விரும்பும் ஒரு தரப்பிற்கு ஆதரவு வழங்கி மீண்டும் ஆட்சியாளர்கள் எங்களை ஏமாற்றிவிட்டார்களெனத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கூறப் போகின்றதா?

கடந்த எழுபது வருடங்களாகத் தமிழ்மக்கள் ஏமாற்றமடைந்தது போதாதா?, கடந்த மூன்றரை வருடங்களாக ரணில்- மைத்திரி அரசாங்கம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை ஏமாற்றியது போதாதா? தமிழ்மக்கள் இதுதொடர்பில் சரியாக விளங்கிக் கொண்டு உரிய முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment